Tuesday, January 10, 2012

விவசாயத்தில் ஆர்முள்ளவர்கள் பயன்பெறும் வகையில் விவசாய தகவல்கள்....





சுற்றுச்சூழல் குறித்து இதுவரை எழுதி வந்தாலும் தற்போதைய நிலையில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதால் இது முதல் புதிய தலைப்பில் இங்கு பதிவிடுகிறேன். இந்த தகவல்கள் அனைத்தும் தமிழக விவசாய பல்கலைக்கழக பேராசிரியர்களிடமிருந்து பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு நன்றி!
விவசாயத்தில் பெரிய பிரச்சியை உண்டாக்கும் எலிகளை ஒழிப்பது பற்றிய பதிவுடன் இந்த பகுதியை தொடங்குகிறேன்.

வயல் வெளிகளில் எலிகள் பொதுவாக கடுமையான சேதத்தை உண்டு பண்ணுகின்றன. குறிப்பாக நெல் அறுவடைக்கு பின் கரும்பு தோட்டங்களில் எலிகள் அதன் இனப்பெருக்கத்தை அதிகரித்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றது. எலி சேதம் செய்வது ஒரு பங்கு என்றால், அது உண்ணும் தானியங்களை போல் 30 மடங்கு தானியங்களை அதன் கழிவு பொருட்கள் மற்றும் துர்நாற்றத்தால் பாழாக்குகின்றது. ஒரு எலிக்கு சுமார் 250 கிராம் உணவும், 40 மிலி நீரும் அன்றாடம் தேவைப்படுகின்றது. 

எலிகள் உணவு இன்றி ஏழு நாட்களும், நீர் இல்லாமல் இரண்டு நாட்கள் நாட்கள் வரையும் உயிர் வாழக்கூடியது. எலிகளின் கூரிய வெட்டுப்பற்கள் மாதம் தோறும் ஒரு செ.மீட்டர் வரை வளருகிறது. ஒரு ஆண்டிற்கு 12.5 செ.மீட்டர் வரை வளர்கிறது. இப்பற்களின் வளர்ச்சியை குறைக்க எலிகள் கட்டாயமாக ஏதாவது ஒரு பொருளை கடித்து கொரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதன் காரணமாக கரும்பு வயல்களில் எலிகளின் சேதம் அதிகமாக தென்படுகிறது. கரும்பு வயலில் உள்ள நிலத்தடி சொட்டு நீர் பாசன குழாய்களையும் கடித்து சேதப்படுத்துகின்றன. நம் நாட்டில் எலிகளால் ஆண்டிற்கு சுமார் 2 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு தானியங்கள் சேதப்படுத்தப்படுகின்றன. 
கரும்பு வயல்களில் எலிகளை கட்டுப்படுத்த

1. பயிர் அறுவடைக்கு பின் கிராமத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து பெரிய வரப்புகளை சிறியதாக்கியும், எலி வளைகளை வெட்டியும் சமப்படுத்தியும் புதர் மற்றும் பொந்துகள் உள்ள வயல்களை சுத்தம் செய்தும் எலிகளை கட்டுப்படுத்தலாம்.

2. தொடர்ந்து கரும்பு சாகுபடியை தவிர்த்து கரும்புக்கு பின் பயறு மற்றும் நெல் போன்ற பயிர்களை சுழற்சி முறையில் சாகுபடி செய்து எலிகளின் தாக்குதலை ஒரளவுக்கு குறைக்கலாம்.
3. வயலில் உள்ள காய்ந்த கரும்பு சருகுகளை வயலில் பரப்புவது எலிகளை அதிகம் ஈர்ப்பதுடன் அவை பொந்துகள் அமைத்து வாழ ஏதுவாக உள்ளதால் கரும்பு தோகைகளை சுத்தம் செய்தால் எலிகளின் நடமாட்டத்தினை மற்றும் இனப்பெருக்கத்தினை குறைக்கலாம்.

4. எலிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும் காலங்களில் ஒரு எலி வளைக்கு மூன்று கிராம் எடையுள்ள அலுமினியம் பாஸ்பைடு மாத்திரையை எலி வளைக்குள் போட்டு வெளித்துவாரத்தை அடைத்தால் புகை மூட்டம் ஏற்பட்டு வளையினுள் உள்ள எலிகள் கொல்லப்படுகின்றன.

5. இரத்தம் உறைவதை தடுக்கும் திறன் வாய்ந்த புரோமோடையலோன் 0.0015 சத வீரியமுள்ள வில்லைகளை ஒரு வளைக்கு ஒரு வில்லை வீதம் எலி நடமாட்டம் உள்ள வளைகளின் முகப்பில் வைப்பதால் எலிகள் சுலபமாக கவரப்பட்டு அவற்றை தின்றவுடன் எலிகள் கொல்லப்படுகின்றன.

6. கரும்பு தோட்டத்தின் வரப்புகளில் தஞ்சாவூர் வில் பொறி வைப்பதன் எலிகளை பிடித்துக் கட்டுப்படுத்தலாம்.

7. இயற்கையிலேயே எலிகளை பிடித்து உண்ணும் இரை விழுங்கிகளை பூனை மற்றும் வேட்டை நாய்களை பயன்படுத்தியும் கரும்பு தோட்டத்தில் எலிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

8. எலி தாக்குதல் அதிக
முள்ள இடங்களில் நிலத்தடி நீர் சொட்டுநீர் பாசனத்தை தவிர்த்து தரை வழி நீர் பாசனத்தை கடைப்பிடிக்கலாம்.

9. ரேட்டால் எனப்படும் எலி மருந்து பேஸ்ட்டை தக்காளி அல்லது தேங்காயில் தடவி வயலில் ஆங்காங்கே வைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம்.

10. அவித்த நெல் அல்லது அரிசி பொரி, முளைகட்டிய தானியங்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் 100 கி. குருணை மருந்தை கலந்து காய வைத்து வயலில் ஆங்காங்கே வைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம்.

11. சொட்டு நீர் பாசனம் செய்யும் இடங்களில் இருக்கும் குழாய்களை எலிகள் கடிப்பதை தவிர்க்க, வயல்களில் ஆங்காங்கே தரையோடு மண்கலயங்களை பதித்து தண்ணீர் நிரப்பி எலிகள் இந்த மண்கலய தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். பிறகு இந்த தண்ணீரில் வாரத்திற்கு ஒரு முறை சிறிய தேக்கரண்டி அளவு பூச்சிக் கொல்லி மருந்தை கலந்து விடவும்.

நன்றி :முனைவர்.இந்திராணி, வேளாண்பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சிநிலையம், மதுரை

No comments:

Post a Comment