Monday, October 8, 2012

மாமரத்தின் பயன்கள்


 மாமரம்









மாமரத்தின் பூர்வீகம் இந்தியா . குறிப்பாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் அதிக மாமரம் உள்ள மாவட்டமாகும். மாமரம் 35 - 40 மீ உயரம் வளரக்கூடிய பெரிய மரமாகும். இதன்
 இலைகள், எப்போதும் பசுமையாகவும் மாற்றடுக்காகவும் அமைந்துள்ளன. கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன. பூக்கள் கிளை நுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. மிதமான இனிய மணத்தையும் கொண்டுள்ளன.

மாமரம் வளர்ப்பது எளிது; மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரகங்கள் வெவ்வேறு குணங்களுடன் கிடைக்கின்றன. உலகிலேயே, அதிகம் அப்படியே உண்ணப்படும் பழம் என்ற சிறப்பு மாம்பழத்தையே சாரும். 

இந்திய மாம்பழ வகைகள் பெரும்பாலும் ஒட்டு மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. வேகமாக வளரக்கூடிய இரகத்தை சேர்ந்த ஒரு வருட மாங்கன்றின் மேல் விருப்பப்படும் இரகத்தினை ஒட்டுவது பொதுவான முறையாகும். சிலநேரம், மண்ணுக்கேற்ப உகந்த இரகங்களின் மேல் சிறந்த குணமுடைய மா இரகங்கள் ஒட்டப் படுகின்றன. இந்தியசீன வகை இரகங்கள் சில விதையிலிருந்தும் வளர்க்கப்படுகின்றன. 

முதல் சில ஆண்டுகள் அடிப்பாகத்தில் 3 அடி உயரம் வரை கிளைகள் வளராமல் கழித்து விடுவது நல்லது. அதன் பிறகு மாமரங்கள் தாமாகவே விரும்பத்தகுந்த நிலைக்கு வளரும்.

இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.

மாந்தளிர்

நீரிழிவு உள்ளவர்கள், மாவின் கொழுந்து இலையை உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.

தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும். மாவிலைச் சாறுடன் தேன், பால் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து அருந்தினால் ரத்தத்துடன் பேதியாவது நிற்கும். மாவிலையை மென்றுவந்தால் ஈறுகள் பலமாகும். மாவிலையின் நடுநரம்பை மைபோல் அரைத்து இமை மேல் வரும் பருக்கள் மீது தடவினால் அவை குணமாகும்.

மாம்பூ

உலர்ந்த பூக்களில் டானின் என்கிற சத்து உள்ளது. மாம்பூவைக் குடிநீரில் இட்டுக் குடித்தால் வயிற்றுப்போக்கு, சிறுநீரக நோய்கள், பால்வினை நோய்கள் ஆகியன குணமாகும். மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து தூளாக்கி அதனுடன் நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் போதும்.

மாம்பிஞ்சு

இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், சீரண சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும்.

மாங்காய்

பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவையும் ரத்த சோகையையும் நீக்கும் திறன் கொண்டது. பாத வெடிப்புகளுக்கு மாங்காயின் சாற்றைப் பூசினால் குணமாகும். காயின் தோலைக் கையளவு எடுத்து நெய்விட்டு வதக்கி, சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும். காயின் தோலை அரைத்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து மோருடன் கலந்து குடித்துவந்தால் ரத்த மூலமும் வயிற்றுப்போக்கும் தீரும்.

மாங்காயை சமைத்துச் சாப்பிடுவது நல்லது. அல்லது ஊறுகாய் செய்து சாப்பிடலாம். மாங்காய் அதிகம் சாப்பிட்டால், பசியின்மை, புண் ஆறாமை, பல் கூச்சம், சிரங்கு போன்றவை உண்டாகும்.

காம்பு

காம்பில் இருந்து வெளிப்படும் பால், படர்தாமரை மற்றும் சொறி சிரங்கு ஆகியவற்றைக் குணமாக்கும்.

மாம்பழம்

மாம்பழத்தில் வைட்டமின் 'ஏ’ சத்து அதிக அளவில் உள்ளது. மாம்பழம் மலச்சிக்கலைப் போக்கும். ரத்தத்தை விருத்தி செய்து கண் பார்வையைத் தெளிவாக்கும். விந்தணுக்களை அதிகப்படுத்தி, உடலை அழகுடன் திகழச் செய்யும்.
பருப்பு, கசகசா, சுக்கு, ஓமம் இவற்றுடன் பழச்சாறு விட்டு அரைத்து, நெய் சேர்த்துக் கொடுத்தால் கடுமையான வயிற்றுப்போக்கும் குணமாகும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.
இதனை கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை அடையலாம்.

மாங்கொட்டை

பருப்பைப் பொன்னிறமாக வறுத்துத் தூளாக்கி உண்டால் வயிற்றுப்போக்கு, வெள்ளைப்படுதல், அதிகமான ரத்தப்பெருக்கு ஆகியன கட்டுப்படும். பருப்புப் பொடியை அரை ஸ்பூன் அளவு எடுத்து நீருடன் இரவில் உண்டு வந்தால் குடலில் உள்ள புழுக்கள் நீங்கும். வெட்டுக்காயம், தீக்காயம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பருப்பை அரைத்துப் பூசலாம். மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.

மாம்பிசின்

கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.

மா மரப்பட்டை

இதனுடன் கோரைக்கிழங்கு சேர்த்து அவித்துப் பிழிந்து அதிவிடயம் மற்றும் இலவங்கப் பிசின் சேர்த்துக் குடித்தால் வயிற்றுப்போக்குடன் கூடிய காய்ச்சல் நீங்கும். மாம்பட்டையை நல்லெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சிய எண்ணெயைப் பயன்படுத்தித் தலைக்குக் குளித்தால் மேக வியாதி, வெள்ளைப்படுதல், விஷக்கடியால் ஏற்படும் வலி ஆகியன குணமாகும். மரப்பட்டையை ஊறவைத்த குடிநீரைக் கொப்பளிக்கப் பல்வலி நீங்கும்.

இலையிலிருந்து வேர் வரை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் மாமரத்தை வீட்டிற்கு ஒரு மரமாவது நட்டு வளர்ப்போம், ஆரோக்கியம் பெறுவோம். அருஞ்சுவையான மாம்பழங்களை சுவைத்து மகிழ்வோம்
.


No comments:

Post a Comment