Tuesday, March 27, 2012

உண்ணா நோன்பால் உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகள்...






உண்ணா நோன்பு உடல் நலத்திற்கு ஏராளமான நன்மைகளை கொண்டு வருகின்றது. வரம்பு மீறாத உண்ணாநோன்பால் நமது மூளை அதிக விழிப்புணர்ச்சியை அடைகிறது என்று கூறுவர். உண்ண ஏதுமின்றி பசித்திருப்போருக்கு வேறு வழியில்லை. எல்லாம் இருந்தும் உண்ணாமல் பசித்து இருப்பது என்பது உடல் கட்டுப்பாடு, உணர்வு கட்டுபாடு ஆகியவற்றால் மூளை செயல்பாடுகளை வளர்த்து உயிரை தழைக்க செய்யவே. உடல் நலத்தோடு உள்ளவர்கள் வழக்கமாக உண்பதைவிடக் குறைவாக உண்ணலாமா? நிச்சயமாக உண்ணலாம். பொதுவாக நமக்கு ஒரு நாளைக்கு 2600 கலோரிகள் தேவை. குறைந்தது 1300 முதல் 1500 கலோரி வரையே போதுமானது. நாம் உண்ணும் உணவு வகைகள் சத்துணவாக இருந்தால் அவற்றில் பாதியளவு உண்டாலே போதுமானது. உடல் நலம் பெற உணவு பற்றி நடத்தப்பட்ட ஆய்வுகளை பற்றி இன்று அறிய தருகின்றேன். 

வயது அதிகமாக ஆக, ஆண்களும் பெண்களும் தாங்கள் வழக்கமாக சாப்பிடும் உணவிலுள்ள கலோரி அளவை குறைத்தால் உடல் நலத்தையும் நினைவாற்றலையும் அதிகரிக்க முடியும் என்று ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வில் வழக்கமான உணவிலுள்ள கலோரி அளவில் ஏறக்குறைய 30 விழுக்காடு குறைத்தவர்கள், பின்னர் நடத்தப்பட்ட நினைவாற்றல் சோதனையில் நன்றாக தேறி இதை உறுதி செய்துள்ளனர். இந்த ஆய்வு பற்றி குறிப்பிடும்போது வயதாகும் வேளையில் உடல் நலத்தையும் நினைவாற்றலையும் வளர்க்க எதையெல்லாம் செய்யக் கூடாது என்பது பற்றிய ஆய்வுகளில் ஒன்று தான் இது என்று முன்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் முனைவர் எ. வெரோணிக்காவும், அவரது குழுவினரும் தேசிய அறிவியல் கழக இதழில் தெரிவித்துள்ளனர். 

இந்த ஆய்வை அவர்கள் முதலில் எலிகளை வைத்து நடத்தினர். எளிதாக கரைந்துபோகும் கொழுப்பமிலங்கள் கொண்ட ஆலீவ் மற்றும் கலோரி அளவு குறைந்த எண்ணெய், மீன்கள் ஆகியவற்றை இவ்வாய்வில் பயன்படுத்தினர். இவற்றை உட்கொள்வது வயதான எலிகளின் மூளை செயல்பாடுகளுக்கு நல்லதாகவும், நினைவாற்றலை வளர்க்க உதவுவதும் தெரியவந்தது. இதேபோன்ற விளைவுகள் மனிதரில் ஏற்படுமா? என்றறிய ஆய்வாளர்கள் முற்பட்டனர். அதற்கு 60 வயதான சராசரி எடையுடைய 50 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களை மூன்று குழுக்களாக பிரித்து இந்த ஆய்வை நடத்தினர். ஒரு குழுவுக்கு 30 விழுக்காடு குறைவான கலோரி அளவுடைய உணவுகள் வழங்கப்பட்டன. இரண்டாவது குழுவினருக்கு அளிக்கப்பட்ட உணவு வகைகளில் எளிதாக கரைந்துவிடக்கூடிய கொழுப்பமில உணவுகள் 20 விழுக்காடு அதிகமாக இருந்தன. மூன்றாவது குழுவினருக்கு வழக்கமாக உடகொள்ளும் உணவே பரிமாறப்பட்டது. மூன்று திங்கள் காலம் இந்த உணவு பழக்கம் தொடர்ந்தது. பிறகு நடத்தப்பட்ட ஆய்வில், உணவில் 30 விழுக்காடு கலோரி அளவு குறைக்கப்பட்ட குழுவினருக்கு சொற்கள் தொடர்பான நினைவாற்றலில் 20 விழுக்காடு கூடுதலான வளர்ச்சி காணப்பட்டது. மாறாக பிற இரண்டு குழுக்களிடமும் எந்த மாற்றங்களும் ஏற்படவில்லை. 

30 விழுக்காடு கலோரி அளவு உணவு குறைவாக வழங்கப்பட்ட குழுவினர் நினைவாற்றலில் வளர்ச்சியடைந்த அதேவேளையில் இன்சுலின் அளவு மற்றும் உடல் வீக்க அறிகுறிகள் குறைவதையும் ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வு முடிவுகளின் படி, வயது அதிகமாகின்றபோது உண்ணுகின்ற உணவுகளில் கலோரி அளவை குறைத்துக் கொள்வது உடல் நலத்திற்கு மிகவும் உகந்தது என தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு முதிய வயதில் நலமான வாழ்வை பெற மேற்கொள்ளப்படும் நோய் தடுப்பு மற்றும் சிகிச்சை முறைகளை வளர்க்க உதவும். 

உணவு தொடர்பாக நடத்தப்பட்ட இன்னொரு ஆய்வில் பசியை கட்டுப்படுத்துவதில் பெண்களை விட ஆண்களே அதிக திறமையானவர்கள் என தெரியவந்துள்ளது. பசியோடு இருக்கும்போது தாங்கள் விரும்பிய உணவை ஒரு தட்டில் வைத்தால், அதை உட்கொள்ளமால் இருக்க பெண்களுக்கு சற்று கடினமாக இருக்குமாம். உணவை உட்கொள்வதற்கு ஏற்படும் உந்துதலை கட்டுப்படுத்துவதில் பெண்கள் தவிக்கத்தான் செய்கிறார்கள் என்கிறது இந்த ஆய்வு. பெண்கள் சீரற்ற உணவு பழக்கங்களை வளர்த்து கொள்வதையும் ஆண்கள் தங்கள் எடையை எளிதாக குறைக்க முடிவதற்கான காரணத்தையும் இதன் மூலம் அவர்கள் விளக்கியுள்ளனர். அதாவது, பெண்கள் பசியாக இருக்கும் நேரத்தில் கலோரி அளவு, ஊட்டசத்து, கொழுப்பு சத்து என எதையும் கவனிக்காமல் அந்த நேரத்தில் கிடைக்கும் உணவை உண்டுவிடுகின்ற காரணத்தை இந்த ஆய்வு விளக்குகிறது. 

ஒருவர் ஆணா இருப்பதோ அல்லது பெண் இருப்பதோ பசியை தாங்கி கொள்ளும் ஆற்றலில் செல்வாக்கு ஏற்படுத்துமா? என்று அறிய ஆண்கள் மற்றும் பெண்களின் மூளை செயல்பாடுகள் ஒப்பிடப்பட்டு ஆராயப்பட்டன. நலமான மற்றும் உடல் பருமனில்லாத தொண்டர்களை 17 மணிநேரம் உண்ணாமல் இருக்க ஆய்வாளர்கள் கேட்டுக்கொண்டனர். பின்னர் அவர்களுக்கு மிகவும் விருப்பமான உணவு வகைகளை அவர்களுக்கு முன் வைத்தனர். பசித்த பின் புசி என்பார்கள். ஆனால், அந்த பசியின் கொடுமையிலும், அருகில் விரும்பிய உணவு வகைகள் இருந்தபோதும், பசியை கட்டுப்படுத்திக் கொண்டு உண்ணமுடியாத மரம், கல், மண் போன்றவற்றை நினைக்க ஆய்வாளர்கள் கூறினர். நியூயார்க்கிலுள்ள Brookhaven தேசிய ஆய்வகத்தில் இந்த ஆய்வை மேற்கொண்ட மருத்துவர் Gene-Jack Wang தொண்டர்களின் மூளை செயல்பாடுகளை வரிமம் செய்தார். அதன்மூலம் பசியோடு இருக்கின்றபோது அருகிலிருக்கும் உணவு எவ்விதமான தூண்டுதலை மூளையில் ஏற்படுத்துகிறது என்று சோதித்தார். 

17 மணிநேரம் பசியோடு இருந்தபோதான மூளையின் செயல்பாடுகளை விட, ஆண்கள் கண்முன் உணவிருக்க சாப்பிட முடியாமல் கல்லையும் மண்ணையும் நினைத்து பசியை அடக்க வேண்டிய நிலையில் அந்த செயல்பாடுகள் குறைந்திருந்தன. ஆனால் பெண்களை பொறுத்த வரை முன்பிருந்த மூளை செயல்பாடுகளில் எந்த மாறுதல்களும் காணப்படவில்லை. எனவே பசியின்போதும் ஆண்களால் உணவு பழக்கத்தை எளிதாக கட்டுப்படுத்த முடியும் என்றும் பெண்களால் அது அவ்வளவு சாத்தியமில்லை என்றும் அறிய வந்தனர். இந்த ஆய்வு தேசிய அறிவியல் கழக இதழில் வெளியாயிற்று. 

உணவு ஆசைகளில் கட்டுப்பாட்டுடன் இருக்க முடியாததே பெண்கள் எடை குறைக்க மேற்கொள்ளும் உணவு கட்டுப்பாடு முயற்சிகளில் வெற்றிபெற முடியாமல் போகிறது என்று மருத்துவர் Wang குறிப்பிட்டார். இவ்வாறு பசியை தாங்கிகொள்ளாத நிலை தான் உடல் பருமன் மற்றும் சீரற்ற உணவு பழக்கவழக்கங்களை பெண்களில் அதிகம் ஏற்படுத்துகிறது என்று அவர் கூறினார். பசிக்கிறது அதனால் உண்டோம் என்றில்லாமல் முதிய வயதில் நாம் உட்கொள்ளும் கலோரி அளவை குறைத்து கொள்வதும், பசியோடு இருக்கும்போது உணவை உண்பதில் நம்மில் ஏற்படும் தூண்டுதலை உணர்ந்து செயல்படுவதும் நமது நாளைய உடல்நலத்திற்கு நன்மை பயக்கும்.

No comments:

Post a Comment