Tuesday, June 12, 2012


பூச்சி, நோய் தாக்குதலைக் கட்டுப்படுத்த சித்திரை கோடை உழவு செய்யவும்...




கார் காலத்தில் பயிர்களைத் தாக்கும் நோய், பூஞ்சாளம், பூச்சிகளுக்கான கருமுட்டைகள் நிலத்தில் தங்கியிருப்பதை அழிப்பதற்கு கோடை உழவு செய்வது சிறந்தது 


 பொதுவாக அனைத்து வகையான பூச்சிகளும் தங்களது இனப் பெருக்கத்துக்கான முட்டைகளை மண்ணிலேயே பாதுகாப்பாக இட்டு வைக்கின்றன. இவை மழை காலத்தில் புழுக்களாக வெளிவந்து பயிர்களை உண்டு வளர்கின்றன. இவற்றை முட்டை நிலையிலேயே அழிப்பதற்கு கோடை காலத்தில் மழை பெய்யும்போது புழுதி உழவு செய்வதே சிறந்த வழியாயாகும்.


 கோடை மழை பெய்யும்போது ஈரத்தைப் பயன்படுத்தி சட்டிக் கலப்பையால் முதல் உழவு செய்யவேண்டும்.


 இதனால் கீழ்மண் மேலாகவும் மேல்மண் கீழாகவும் புறட்டப்படும்.
 இதில் மண்ணில் அடியிலிருக்கும் பூச்சிகளது முட்டைகள், புழுக்கள் அனைத்தும் வெளியேற்றப்படும். மேலும், பயிர்களுக்கு நோய் பரப்பும் பூசணங்கள், பாக்டீரியாக்கள் சூரிய வெப்பத்தால் அழிக்கப்படுகின்றன. இதனால் பயிரிடும் காலத்தில் பயிர்களுக்கு நோய் தாக்குதல் வாய்ப்பு மிகவும் குறையும்.


 மேலும், மண்ணின் இறுகிய தன்மை மாறி இளகிய நிலைக்கு வரும். மழை நீர் நிலத்தினுள் சென்று ஈரரப்பதம் காக்கப்படும். காற்றோட்டமும் ஏற்படும். கோடை உழவு செய்யும்போது நிலத்தின் சரிவுக்கு ஏற்ற வகையில், குறுக்காக உழவு அமைய வேண்டும். அவ்வாறு உழவுசால் அமைக்கும்போது மண்ணின் ஊட்டச்சத்து மிகுந்த மேல் மண் அரிமானம் ஏற்படாமல் தடுக்கலாம். மண்ணிலுள்ள அங்ககச் சத்துகள் வெளிச் செல்லாது.


 முதல் உழவுக்குப் பின்னர் இரண்டாவது உழவை கொத்துக் கலப்பை கொண்டு உழ வேண்டும். இலை தழைகள், சருகுகள் கோடை உழவில் மண்ணுக்குள் புதைவதால் மண்ணில் கரிமச் சத்துக்குகள் அதிகரிக்கும்.
இருபோக சாகுபடிப் பகுதிகளில் இரண்டாவது உழவின்போது சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பசுந்தால் உரச் செடிகளை விதைக்கலாம். இவை வளர்ந்து நெல் சாகுபடிக்கு முன் நிலத்தில் மடக்கி உழவு செய்தால தழைச்சத்தை அதிகரிக்கலாம்.


 ஒருபோகச் சாகுபடிப் பகுதிகளில் இரண்டாவது உழவின்போது கொலுஞ்சி போன்ற தழைச் சத்துச் செடி விதையை விதைக்கலாம்.