Wednesday, January 11, 2012

விவசாயி-காதலன்

மண்ணில் விதை விதைத்து
வாழ்க்கைக்காக போரடுபவன்
விவசாயி...
பெண்ணின் மனதில் விதை
விதைத்து வாழ்க்கையை
தொலைப்பவன் காதலன்..

பிறப்பு

நமது பிறப்பு
ஒரு சம்பவமாக இருக்காலம்..
நமது இறப்பு
சரி்த்திரமாக இருக்க வேண்டும்...

மரங்களை நேசி

மனிதா
மரங்களை நேசி...
மனிதர்கள்
உன்னை நேசிக்க
மறந்தாலும்....
மரங்கள்
உன்னை சுவாசிக்க
மறக்காது...

நீ நீயாக இரு

பக்தி வந்தால்
புத்தி போகும்...
புத்தி வந்தால்
பக்தி போகும்...

நண்பனே சிறந்தவன்

தவறுகளை நியாயப்படுத்தும்
நண்பனை விட
தவறுகளை சுட்டி காட்டும்
நண்பனே சிறந்தவன்...
உன்னிடம் உரிமையுள்ளவன்
உறக்கத்தில் பேசுவான்...
உறக்கத்தில் பேசுபவன்
உன்னிடம்
உண்மையை பேசுவான்....

உழைப்பை நம்பு

உழைப்பை நம்பு
உறவுகளை நம்பாதே...
உறவுகள் உன்னிடம்
எதையாவது ஒன்றை
எதிர்பார்த்து கொண்டிருக்கும்..

உழைப்பு
உன் வெற்றியை மட்டுமே
எதிர்பார்த்து கொண்டிருக்கும்..

நீ நீயாக

நீ
கடந்து வந்த பாதையை
திரும்பி பார்
உன்னை நீ
அறிவாய்..

நட்பு மட்டும் தான்....

நிழல் கூட வெளிச்சம்
உள்ளவரை தான்
துணைக்கு வரும்...

நிழலாக இருந்தாலும்
நிஜமாக துணைக்கு வரும்
ஒரே உறவு
நட்பு மட்டும் தான்..

நீங்கள் சுமக்கின்ற
நம்பிக்கை கீழே
விழும் போதும்
உங்களை சுமக்கின்ற
ஒரே உறவும்
நட்பு மட்டும் தான்..

Tuesday, January 10, 2012

மூலிகை விவசாயம்-வளம் பெரும் விவசாயிகளின் வாழ்வு..



6ஞாயிறு,மார்ச்
ஆவாரை செடி
" ஆவாரை பூத்திருக்க சாவரை கண்டதுண்டோ" - ஆவாரை செடியை மருந்துக்கு பயன்படுத்தினால் இறப்பு கூட பக்கத்தில் வராது என்பது தான் இதற்கு பொருள். தமிழ்நாட்டில் நீங்கள் எங்கு பயணம் செய்யும் போதும் இந்த ஆவாரை மஞ்சள் நிறத்தில் பூக்களுடம் சாலையின் ஒரங்களில் எங்கும் வளர்ந்து கிடப்பதை பார்க்கலாம். இப்படி வளர்ந்து கிடக்கும் செடியை பறித்து பணம் பார்க்க தான் யாரும் முன்வருவதில்லை.

இந்தியா தொடங்கி இங்கிலாந்து வரை பெண்களின் அழகை மேம்படுத்துவதற்காக விற்பனை செய்யப்பட்டும் இயற்கை கிரீம்களில் இந்த ஆவரை சேர்க்கப்படுகிறது. ஆவாரையை பொடியாக்கி தேய்த்து குளித்து வந்தால் உடல் பொன்னிறமாக மாறும் என்கிறது சித்த நூல்கள். 

இது போல் தமிழ்நாட்டில் சாலை ஓரங்களிலும், வயல்வரப்புகளிலும் மருத்துவ குணமுடைய ஏராளமான மூலிகைகள் வளர்ந்து கிடக்கின்றன. தமிழ்நாட்டின் மாவட்டங்கள் அனைத்தும் இயற்கையாகவே சிறந்த மண்வளம் மற்றும்  தட்பவெப்ப நிலையை கொண்டிருக்கிறது. இப்படியிருந்தும் உலக அளவில் இந்தியாவின் மூலிகை ஏற்றுமதி வணிகம் என்பது 1 சதவீதத்திற்கும் கீழ்.

உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கையின்படி உலகின் பெரும்பான்மையான மக்கள் தங்களுக்கு ஏற்படும் நோய்களை தீர்த்துக் கொள்ள பாரம்பரிய மருத்துவ முறைகளையே நாடுவதாக கூறுகிறது.  வளர்க்க வளர்க்க பணத்தை, டாலர்களை அள்ளித்தரும் ஒரே வளம் மூலிகைகள் மட்டுமே. 

இந்தியாவிலும் கடந்த 10-15 ஆண்டுகளாக பாரம்பரிய மருத்துவ முறைகள் நன்றாக வளரத் தொடங்கியுள்ளது. இதனால் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மருந்து தயாரிப்புக்கான மூலிகைகளின் தேவை பல ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் அளவிற்கு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து மத்திய அரசு, மூலிகை தொடர்பான தொழில்களில் ஈடுபட விரும்புபவர்களுக்கு பல்வேறு உதவிகளை செய்ய முன்வந்துள்ளது. இதற்காக, தேசிய மருத்துவ தாவரங்கள் வாரியம் என்று ஒரு வாரியத்தை உருவாக்கியுள்ளது. மத்திய அரசு உருவாக்கிய இந்த வாரியத்தின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில மருத்துவ தாவர வாரியம் என்ற அமைப்பு செயல்படுகிறது.

மருத்துவ தாவரங்கள் தொடர்பான அனைத்து நிகழ்வுகளையும் ஒருங்கிணைப்பது, பாரம்பரிய மருத்துவ துறையை வளர்க்க தேவையான கொள்கைகளை உருவாக்குவது, பணம் ஈட்டக்கூடிய தாவரங்களை பயிரிடுதல், முறையான அறுவடை செய்தல், ஆய்வு மற்றும் வளர்ச்சிப்பணிகளை மேற்கொள்வது, பதப்படுத்துதல், மூலப்பொருட்களை உருவாக்குதல், சந்தை நிலவரம் உள்பட பல தகவல்களை மூலிகை பயிரிடுவோருக்கும் ஏற்றுமதியாளர்களுக்கும் எடுத்து சொல்வது தான் இந்த வாரியத்தின் வேலை.

இந்த வாரியம் மூலிகை பயிரிட விரும்புபவர்களுக்கு பல உதவிகளை செய்து வருகிறது. இதனை தெரிந்து கொண்டவர்கள் சிறிய அளவில் நிலம் இருந்தால் கூட அதிக அளவு டாலர்களை மூலிகைகளை விற்பனை செய்வதன் மூலம் பெற முடியும். எனவே இந்த பதிவை பதிக்கும் படிக்கும் பதிவர்களுக்கு வசதியாக தமிழ்நாட்டின் எந்த மாநிலத்தில் என்ன மாதிரியான மூலிகைகள் நன்றாக வளரும் என்ற பட்டியலையும் இங்கு கொடுத்துள்ளேன்.

இந்த தாவரங்களை பயிரிட விரும்பும் விவசாயிகள், பயிர் செய்யவுள்ள மூலிகை, எத்தனை ஏக்கர் பரப்பில பயிரிட திட்டமிடப்பட்டுள்ளது, அதற்காக தேவைப்படும் நிதி அளவு உள்ளிட்ட விவரங்களை குறிப்பிட்டு  விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து சென்னையில் இயங்கும் மாநில மருத்துவ தாவர வாரியத்திற்கு அனுப்ப வேண்டும்.

இவ்வாறு பெறப்பட்ட திட்ட அறிக்கை தேசிய மருத்துவ தாவர வாரியத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு சிறந்த திட்ட அறிக்கைகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கு தகுந்த மானியம் வழங்கப்படும். இந்த மானியம் விண்ணப்பதாரருக்கு இரண்டு அல்லது மூன்று தவணைகளில் வழங்கப்படும். 

மூலிகை தாவரங்களை பயிரிடும் விவசாயிகள் அவற்றை நல்ல லாபத்தில் உள்ளூரில் விற்க தேவையான நடவடிக்கைகளை வாரியம் செய்துள்ளது. இதன்படி மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் முகவரிகள், மூலிகைகளை வாங்குவோர் பற்றிய தகவல்களையும்  அளித்துள்ளது.

எனவே உங்கள் நிலமும் மூலிகை தாவரங்களை வளர்க்க ஏதுவானதாக இருந்தால் உடனே வர்த்தகரீதியாக லாபம் தரக்கூடிய மூலிகைகளை பயிரிட்டு பலன் பெறலாம். இது குறித்து மேலும் தகவல் பெற விரும்புபவர்கள்


மாநில மருத்துவ தாவரங்கள் வாரியம், 
அரும்பாக்கம், சென்னை-06. 
தொலைபேசி எண்: 044-2622 2565/ 2621 4844 / 2628 1563 யில் தொடர்பு கொள்ளலாம். 


எந்த மாவட்டத்தில் என்ன மூலிகை வளரும்?

தற்போது தேசிய மருத்துவதாவர வாரியம் உலகின் மூலிகை தேவையை கருத்தில் கொண்டு 2011-12ல் 80 ஆயிரம் முதல் 1 லட்சம் எக்டர் பரப்பளவில் மூலிகை சாகுபடியை செய்ய திட்டமிட்டுள்ளது. இதற்காக 200 வகையான விதை மற்றும் கன்றுகளுடன் கூடிய தரம் வாய்ந்த பயிர்த் தோட்டங்களை அமைப்பது, மருந்து தர நிர்ணய ஆய்வகங்கள் நிறுவுவது உள்பட பல திட்டங்களை செயல்படுத்த உள்ளது.  எனவே கீழ்க்கண்ட மாவட்டங்களில் சில மூலிகைகள் நன்றாக வளர வாய்ப்புள்ளன. இதனை பயன்படுத்தி மருத்துவ தாவரங்களை பயிரிட்டு பணம் காணலாம்.

சித்தாமுட்டி-(தமிழகத்தின் அனைத்து வறண்ட நிலப்பகுதிகள்)
பாரிசவாதம், பக்கவாதம், முகவாதம் போன்ற கடும் வாத நோய்களை தீர்க்க உதவும் சித்தாமுட்டி 1000 மெட்ரிக் டன் அளவு தேவைப்படுகிறது. இதனை தமிழ்நாட்டின் அனைத்து வறண்ட நிலப்பகுதிகளிலும் பயிரிடலாம்.

கலப்பைக் கிழங்கு -( சேலம், பெரம்பலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி )

மருந்து கூர்க்கன் (திருவண்ணாமலை, சேலம், ஈரோடு, கோயமுத்தூர்)

அமுக்கரா -( கம்பம், கொல்லிமலை, ஏற்காடு, ஓசூர்)


தாட்டுபூட்டு பூ- (சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி)

கடல் அழிஞ்சில் (வேதாரணியம், கோடியக்கரை, கன்னியாகுமரி)


நுணா -(ஈரோடு, கோயமுத்தூர், திருநெல்வேலி, மேற்குத் தொடர்ச்சி மலைகளான தேனி, பெரியகுளம். உடலின்நாடி நடையை உயர்த்த உதவும் நுணாவிற்கு 1000 மெட்ரிக் டன் தேவை உள்ளது.


கள்ளி முளையான் -(திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி)
சக்கரைக் கொல்லி -(திண்டுக்கல், தேனி, பெரியகுளம், திருநெல்வேலி)

திப்பிலி -(கொல்லிமலை, பழனிமலை, கன்னியாகுமரி, குளிர்ந்த பகுதிகளான ஓசூர், பெரியகுளம், தேனி, போடிநாயக்கனூர்)

அசோகா -(மேற்கு தொடர்ச்சி மலையின் பின்பகுதி)
கருச்சிதைவு, கர்ப்பசூலை உள்ளிட்ட பெண்களின் நோய்களுக்கு அருமருந்தாகும் இதன் ஆண்டு தேவை 100 மெட்ரிக் டன்கள்

மாகாலி வேர்- (தென்மலை, ஜவ்வாது மலை முழுவதும்)

பாலைக்கீரை -(திருவள்ளூர் மாவட்டம் முழுவதும்)

நிலவேம்பு -( ஈரோடு, கோயமுத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, தஞ்சாவூர், கடலூர்)

இசப்பு கோல் -( இராமநாதபுரம், விருதுநகர்)

மேலும் வல்லாரை, மணத்தக்காளி, நெல்லி, நிலாவரை, நிலப்பணைக்கிழங்கு, சிறுகுறிஞ்சான், கறிவேப்பிலை, கீழாநெல்லி, கருந்துளசி, வசம்பு, சித்தரத்தை, ஆடாதோடை, அதிவிடயம், பச்சைநாபி, சோற்றுக்கற்றாழை போன்றவையும் மருத்துவ தேவைக்காக உலக அளவில் 500 முதல் 1000 மெட்ரிக் டன்கள் அளவு வரை தேவைப்படுகிறது. எனவே மேற்கண்ட மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் தகுந்த மூலிகைகளை பயிரிட்டால் கை மேல் காசு நிச்சயம்.

வறட்சியில் வளம் தரும் கற்றாழை பயிர்...


கல்வி கற்றோரே ...வாங்க கற்றாலையில் காசு பார்க்கலாம் !!!






                           

பெரிய அளவுக்கு வேளாண்தொழில் நுட்பங்கள் தேவை இல்லை கற்றாழை பயிரிட ...எனவே படித்த இளைஞர்கள் ஊரில் நிலத்தை குத்தகைக்கு எடுத்து பரிட்ச்சார்த்தமாக கற்றாழை பயிரிடலாம்.

கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கான ஒரு மருத்துவ பயிர். ஆப்ரிக்காவை தாயகமாக கொண்ட கற்றாழை லில்லியேசி குடும்பத்தை சேர்ந்த தாவரம். கற்றாழை இலைகளிலிருந்து எடுக்கப்படும் ஜெல் எனப்படும் கூழ் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. சூரிய ஒளியிலிருந்து வரும் கடும் வெப்பத்தை தரும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர்வீச்சுக்களின் தீயவிளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது.

மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை பாதுகாக்கின்றது. இதனால் வெயில் கொடுமை அதிகரிக்கும் நாடுகளில் கற்றாழைக்கு வளமான வாய்ப்பிருக்கிறது. கற்றாழையில் காணப்படும் அலோயின் மற்றும் அலோசான் வேதிப்பொருள்கள் இருமல், சளி,குடல் புண், கடும்வயிற்று புண், தோலில் ஏற்படும் தீக்காயம், வெட்டுக்காயங்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

ரகங்கள்
கற்றாழையில் பல ரகங்கள் உண்டு. கற்றாழையில் ஜான்சிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை மற்றும் நேட்டல் கற்றாழை மற்றும் ஜபாராபாத் கற்றாழை ஆகியவை தரம் வாய்ந்தவையாக இருந்து வந்துள்ளன. இவற்றின் ஜெல் கண்ணாடி போல் தரமான தோற்றம் கொண்டது. இந்தியாவில் அலோ பார்படன்சிஸ் நாடு முழுவதும் தானே வளர்ந்து பரவலாக காணப்படுகிறது. 

இதன் இலைகள் தடிமனாகவும், சிறிது சிவப்பு கலந்து பச்சை நிறத்திலும் காணப்படுகிறது. செடிகள் நட்ட இரண்டாவது ஆண்டில் தான் பூக்கும். செடிகளில் பூக்கள் தோன்றினாலும், மகரந்தங்கள் செயலிழந்து இருப்பதால் காய் மற்றும் விதைகள் பிடிப்பதில்லை. இதனால் பக்க கன்றுகள் மூலமாக தான் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது.

மண்வளம்
தரிசுமண்,மணற்பாங்கான நிலம், பொறை மண் போன்றவை ஏற்றது. காரத்தன்மை 7 முதல் 8.5 வரை இருக்கலாம்.

தட்ப வெப்ப நிலை
வறட்சியான நிலையில், அதாவது 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உள்ள பகுதிகளில் நன்றாக வளர்கிறது. தமிழ்நாட்டில் இராமநாதபுரம், மதுரை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிர் செய்யலாம்.

பயிர் பெருக்கம்
தாய்ச்செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மாத வயதுடைய பக்க கன்றுகளை பிரித்து நடவுக்கு பயன்படுத்தலாம். ஒரே அளவுள்ள பக்க கன்றுகளை தேர்வு செய்வது முக்கியம். பக்க கன்றுகளை பிரித்ததும் அவற்றின் வேரை கார்பன்டசிம் மருந்தினால் ஐந்து நிமிடத்திற்கு நனைத்த பிறகு நடலாம். இதனால் அழுகல் நோய் வராமல் தடுக்கலாம். எக்டருக்கு 10 ஆயிரம் பக்க கன்றுகள் தேவைப்படும்.

விதைக்கும் பருவம்
ஜுன்,ஜுலை மற்றும் அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் நடவு செய்யலாம்.

நிலம் தயாரிப்பு
நிலத்தை இரண்டு முறை உழுது எக்டருக்கு 10டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்க வேண்டும். செடிகள் செழிப்பாக வளர்வதற்காக செடிக்கு செடி மூன்று அடி பாத்திகளை அமைக்க வேண்டும்.

உரமிடுதல்
கற்றாழை செடிகளுக்கு தொழு உரமிட்டால் சிறப்பாக வளரும். தரிசு மற்றும் சத்தற்ற மண்ணில் நட்ட 20 வது நாளில் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து மற்றும் 120 கிலோ ஜிப்சம் இடுவது நல்லது.

நீர்ப்பாசனம்
கற்றாழையை மானவாரிப்பயிராக பயிர் செய்வது நல்லது. ஆனாலும் பயிர் காலத்தில் நான்கு அல்லது ஐந்து முறை நீர்ப்பாசனம் அளிக்கலாம்.

பயிர் பாதுகாப்பு
கற்றாழையில் நோய் தாக்குதல் பெரும்பாலும் இல்லை. நீர் தேங்கும் நிலத்தில் அழுகல் நோய் ஏற்படலாம். வடிகால் வசதி உண்டாக்கினால் இதனை தடுக்கலாம்.

அறுவடை
வணிக ரீதியாக பயிர் செய்யும் போது செடிகளை நட்ட ஆறு முதல் ஏழு மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும். இந்த நேரத்தில் இலையில் அதிக அளவு அலேயின் என்ற வேதிப்பொருள் இருக்கும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து இலைகளை ஆறு மணி நேரத்திற்குள் பக்குவப்படுத்தி விட வேண்டும்.

மகசூல்
எக்டருக்கு 15 டன் கற்றாழை இலை மகசூலாக கிடைக்கும். இலையில் 80 முதல் 90 விழுக்காடு வரை நீராக இருப்பதால் விரைவில் கெட்டு விடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து கூழ் படிமத்தை பிரித்தெடுத்து விட வேண்டும்.

வேளாண்மை மீது அக்கறை இருக்கும் படித்த இளைஞர்கள் கற்றாழை விவசாயம் மூலம் தங்களது வேளாண் தொழிலை தொடங்கலாம்.

விவசாயத்தில் ஆர்முள்ளவர்கள் பயன்பெறும் வகையில் விவசாய தகவல்கள்....





சுற்றுச்சூழல் குறித்து இதுவரை எழுதி வந்தாலும் தற்போதைய நிலையில் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என்பதால் இது முதல் புதிய தலைப்பில் இங்கு பதிவிடுகிறேன். இந்த தகவல்கள் அனைத்தும் தமிழக விவசாய பல்கலைக்கழக பேராசிரியர்களிடமிருந்து பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுக்கு நன்றி!
விவசாயத்தில் பெரிய பிரச்சியை உண்டாக்கும் எலிகளை ஒழிப்பது பற்றிய பதிவுடன் இந்த பகுதியை தொடங்குகிறேன்.

வயல் வெளிகளில் எலிகள் பொதுவாக கடுமையான சேதத்தை உண்டு பண்ணுகின்றன. குறிப்பாக நெல் அறுவடைக்கு பின் கரும்பு தோட்டங்களில் எலிகள் அதன் இனப்பெருக்கத்தை அதிகரித்து பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றது. எலி சேதம் செய்வது ஒரு பங்கு என்றால், அது உண்ணும் தானியங்களை போல் 30 மடங்கு தானியங்களை அதன் கழிவு பொருட்கள் மற்றும் துர்நாற்றத்தால் பாழாக்குகின்றது. ஒரு எலிக்கு சுமார் 250 கிராம் உணவும், 40 மிலி நீரும் அன்றாடம் தேவைப்படுகின்றது. 

எலிகள் உணவு இன்றி ஏழு நாட்களும், நீர் இல்லாமல் இரண்டு நாட்கள் நாட்கள் வரையும் உயிர் வாழக்கூடியது. எலிகளின் கூரிய வெட்டுப்பற்கள் மாதம் தோறும் ஒரு செ.மீட்டர் வரை வளருகிறது. ஒரு ஆண்டிற்கு 12.5 செ.மீட்டர் வரை வளர்கிறது. இப்பற்களின் வளர்ச்சியை குறைக்க எலிகள் கட்டாயமாக ஏதாவது ஒரு பொருளை கடித்து கொரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இதன் காரணமாக கரும்பு வயல்களில் எலிகளின் சேதம் அதிகமாக தென்படுகிறது. கரும்பு வயலில் உள்ள நிலத்தடி சொட்டு நீர் பாசன குழாய்களையும் கடித்து சேதப்படுத்துகின்றன. நம் நாட்டில் எலிகளால் ஆண்டிற்கு சுமார் 2 ஆயிரத்து 500 கோடி அளவிற்கு தானியங்கள் சேதப்படுத்தப்படுகின்றன. 
கரும்பு வயல்களில் எலிகளை கட்டுப்படுத்த

1. பயிர் அறுவடைக்கு பின் கிராமத்திலுள்ள அனைத்து விவசாயிகளும் ஒருங்கிணைந்து பெரிய வரப்புகளை சிறியதாக்கியும், எலி வளைகளை வெட்டியும் சமப்படுத்தியும் புதர் மற்றும் பொந்துகள் உள்ள வயல்களை சுத்தம் செய்தும் எலிகளை கட்டுப்படுத்தலாம்.

2. தொடர்ந்து கரும்பு சாகுபடியை தவிர்த்து கரும்புக்கு பின் பயறு மற்றும் நெல் போன்ற பயிர்களை சுழற்சி முறையில் சாகுபடி செய்து எலிகளின் தாக்குதலை ஒரளவுக்கு குறைக்கலாம்.
3. வயலில் உள்ள காய்ந்த கரும்பு சருகுகளை வயலில் பரப்புவது எலிகளை அதிகம் ஈர்ப்பதுடன் அவை பொந்துகள் அமைத்து வாழ ஏதுவாக உள்ளதால் கரும்பு தோகைகளை சுத்தம் செய்தால் எலிகளின் நடமாட்டத்தினை மற்றும் இனப்பெருக்கத்தினை குறைக்கலாம்.

4. எலிகளின் இனப்பெருக்கம் அதிகமாக இருக்கும் காலங்களில் ஒரு எலி வளைக்கு மூன்று கிராம் எடையுள்ள அலுமினியம் பாஸ்பைடு மாத்திரையை எலி வளைக்குள் போட்டு வெளித்துவாரத்தை அடைத்தால் புகை மூட்டம் ஏற்பட்டு வளையினுள் உள்ள எலிகள் கொல்லப்படுகின்றன.

5. இரத்தம் உறைவதை தடுக்கும் திறன் வாய்ந்த புரோமோடையலோன் 0.0015 சத வீரியமுள்ள வில்லைகளை ஒரு வளைக்கு ஒரு வில்லை வீதம் எலி நடமாட்டம் உள்ள வளைகளின் முகப்பில் வைப்பதால் எலிகள் சுலபமாக கவரப்பட்டு அவற்றை தின்றவுடன் எலிகள் கொல்லப்படுகின்றன.

6. கரும்பு தோட்டத்தின் வரப்புகளில் தஞ்சாவூர் வில் பொறி வைப்பதன் எலிகளை பிடித்துக் கட்டுப்படுத்தலாம்.

7. இயற்கையிலேயே எலிகளை பிடித்து உண்ணும் இரை விழுங்கிகளை பூனை மற்றும் வேட்டை நாய்களை பயன்படுத்தியும் கரும்பு தோட்டத்தில் எலிகளின் எண்ணிக்கையை குறைக்கலாம்.

8. எலி தாக்குதல் அதிக
முள்ள இடங்களில் நிலத்தடி நீர் சொட்டுநீர் பாசனத்தை தவிர்த்து தரை வழி நீர் பாசனத்தை கடைப்பிடிக்கலாம்.

9. ரேட்டால் எனப்படும் எலி மருந்து பேஸ்ட்டை தக்காளி அல்லது தேங்காயில் தடவி வயலில் ஆங்காங்கே வைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம்.

10. அவித்த நெல் அல்லது அரிசி பொரி, முளைகட்டிய தானியங்கள் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றுடன் 100 கி. குருணை மருந்தை கலந்து காய வைத்து வயலில் ஆங்காங்கே வைத்து எலிகளை கட்டுப்படுத்தலாம்.

11. சொட்டு நீர் பாசனம் செய்யும் இடங்களில் இருக்கும் குழாய்களை எலிகள் கடிப்பதை தவிர்க்க, வயல்களில் ஆங்காங்கே தரையோடு மண்கலயங்களை பதித்து தண்ணீர் நிரப்பி எலிகள் இந்த மண்கலய தண்ணீரை குடிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும். பிறகு இந்த தண்ணீரில் வாரத்திற்கு ஒரு முறை சிறிய தேக்கரண்டி அளவு பூச்சிக் கொல்லி மருந்தை கலந்து விடவும்.

நன்றி :முனைவர்.இந்திராணி, வேளாண்பல்கலைக்கழகம் மற்றும் ஆராய்ச்சிநிலையம், மதுரை

கற்றாழைக்கு சிறந்த எதிர்காலம்....





உலகம் முழுவதும் ஏற்றுமதி வாய்ப்புள்ள கற்றாழை பல்வேறு மாவட்டங்களிலும் செழிப்பாக வளர்ந்து கிடைக்கிறது.கற்றாழை வறட்சியான பகுதிகளில் வளர்ப்பதற்கான ஒரு மருத்துவ பயிர். ஆப்ரிக்காவை தாயகமாக கொண்ட கற்றாழை லில்லியேசி குடும்பத்தை சேர்ந்த தாவரம். கற்றாழை இலைகளிலிருந்து எடுக்கப்படும் ஜெல் எனப்படும் கூழ் சருமத்தின் ஈரப்பதத்தை பாதுகாக்கிறது. சூரிய ஒளியிலிருந்து வரும் கடும் வெப்பத்தை தரும் காமா மற்றும் எக்ஸ்ரே கதிர்வீச்சுக்களின் தீயவிளைவுகளிலிருந்து சருமத்தை பாதுகாக்கின்றது. மேலும் சருமத்தின் ஈரத்தன்மையை பாதுகாக்கின்றது. இதனால் வெயில் கொடுமை அதிகரிக்கும் நாடுகளில் கற்றாழைக்கு வளமான வாய்ப்பிருக்கிறது.

கற்றாழையில் காணப்படும் அலோயின் மற்றும் அலோசான் வேதிப்பொருள்கள் இருமல், சளி,குடல் புண், கடும்வயிற்று புண், தோலில் ஏற்படும் தீக்காயம், வெட்டுக்காயங்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. கற்றாழையில் பல ரகங்கள் உண்டு. கற்றாழையில் ஜான்சிபார் கற்றாழை, யுகான்டா கற்றாழை மற்றும் நேட்டல் கற்றாழை மற்றும் ஜபாராபாத் கற்றாழை ஆகியவை தரம் வாய்ந்தவையாக இருந்து வந்துள்ளன. இவற்றின் ஜெல் கண்ணாடி போல் தரமான தோற்றம் கொண்டது.

இந்தியாவில் அலோ பார்படன்சிஸ் நாடு முழுவதும் தானே வளர்ந்து பரவலாக காணப்படுகிறது. இதன் இலைகள் தடிமனாகவும், சிறிது சிவப்பு கலந்து பச்சை நிறத்திலும் காணப்படுகிறது. செடிகள் நட்ட இரண்டாவது ஆண்டில் தான் பூக்கும். செடிகளில் பூக்கள் தோன்றினாலும், மகரந்தங்கள் செயலிழந்து இருப்பதால் காய் மற்றும் விதைகள் பிடிப்பதில்லை. இதனால் பக்க கன்றுகள் மூலமாக தான் பயிர் பெருக்கம் செய்யப்படுகிறது.  

மண்வளம் தரிசுமண்,மணற்பாங்கான நிலம், பொறை மண் போன்றவை ஏற்றது. காரத்தன்மை 7 முதல் 8.5 வரை இருக்கலாம்.  

தட்ப வெப்ப நிலை வறட்சியான நிலையில், அதாவது 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் உள்ள பகுதிகளில் நன்றாக வளர்கிறது. தமிழ்நாட்டில் இராமநாதபுரம், மதுரை, நெல்லை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிர் செய்யலாம்.  

பயிர் பெருக்கம் தாய்ச்செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மாத வயதுடைய பக்க கன்றுகளை பிரித்து நடவுக்கு பயன்படுத்தலாம். ஒரே அளவுள்ள பக்க கன்றுகளை தேர்வு செய்வது முக்கியம். பக்க கன்றுகளை பிரித்ததும் அவற்றின் வேரை கார்பன்டசிம் மருந்தினால் ஐந்து நிமிடத்திற்கு நனைத்த பிறகு நடலாம். இதனால் அழுகல் நோய் வராமல் தடுக்கலாம். எக்டருக்கு 10 ஆயிரம் பக்க கன்றுகள் தேவைப்படும்.

விதைக்கும் பருவம் ஜுன்,ஜுலை மற்றும் அக்டோபர், செப்டம்பர் மாதங்களில் நடவு செய்யலாம்.  

நிலம் தயாரிப்பு நிலத்தை இரண்டு முறை உழுது எக்டருக்கு 10டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து சிறிய பாத்திகளை அமைக்க வேண்டும். செடிகள் செழிப்பாக வளர்வதற்காக செடிக்கு செடி மூன்று அடி பாத்திகளை அமைக்க வேண்டும்.  
உரமிடுதல் கற்றாழை செடிகளுக்கு தொழு உரமிட்டால் சிறப்பாக வளரும். தரிசு மற்றும் சத்தற்ற மண்ணில் நட்ட 20 வது நாளில் எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து மற்றும் 120 கிலோ ஜிப்சம் இடுவது நல்லது.  

நீர்ப்பாசனம் கற்றாழையை மானவாரிப்பயிராக பயிர் செய்வது நல்லது. ஆனாலும் பயிர் காலத்தில் நான்கு அல்லது ஐந்து முறை நீர்ப்பாசனம் அளிக்கலாம்.  

பயிர் பாதுகாப்பு கற்றாழையில் நோய் தாக்குதல் பெரும்பாலும் இல்லை. நீர் தேங்கும் நிலத்தில் அழுகல் நோய் ஏற்படலாம். வடிகால் வசதி உண்டாக்கினால் இதனை தடுக்கலாம்.  

அறுவடை வணிக ரீதியாக பயிர் செய்யும் போது செடிகளை நட்ட ஆறு முதல் ஏழு மாதங்களில் அறுவடைக்கு தயாராகி விடும். இந்த நேரத்தில் இலையில் அதிக அளவு அலேயின் என்ற வேதிப்பொருள் இருக்கும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்து இலைகளை ஆறு மணி நேரத்திற்குள் பக்குவப்படுத்தி விட வேண்டும்.  

மகசூல் எக்டருக்கு 15 டன் கற்றாழை இலை மகசூலாக கிடைக்கும். இலையில் 80 முதல் 90 விழுக்காடு வரை நீராக இருப்பதால் விரைவில் கெட்டு விடும். இதனால் அறுவடை செய்த உடனே இலைகளை பக்குவப்படுத்தி அவற்றிலிருந்து கூழ் படிமத்தை பிரித்தெடுத்து விட வேண்டும். 

தகவல்: முனைவர்.ராஜாமணி, அழகிய மணவாளன்.

மரக்கன்றுகளை உருவாக்குவது எப்படி..?



பாத்தியில் முளைத்துள்ள செடிகள்

இப்போதெல்லாம் திருமண விழாக்கள், வேறு சில விற்பனை நிறுவனங்கள் கூட அங்கு நாம் செல்லும் போது மரக்கன்றுகளை இலவசமாக தருகிறார்கள். இப்போது இப்படி மரக்கன்றுகளை வழங்குவது முக்கிய சடங்காகவே மாறி விட்டது. இப்படி பெரிய அளவிலான விற்பனை மையங்களுக்கும், விழாக்களுக்கும் தேவைப்படும் மரக்கன்றுகளை சில நர்சரிகளில் இருந்து தான் பெறுகிறார்கள். எதிர்காலத்தில் இதுபோன்ற மரக்கன்றுகள் அதிகம் தேவைப்படும். எனவே மரக்கன்றுகளை ஆயிரக்கணக்கில் உருவாக்குவது எப்படி என்று இங்கு பார்க்கலாம். அதற்கு முன் கடந்த பதிவின் தொடர்ச்சியாக பொது இடங்களில் வைக்கப்படும் மரக்கன்றுகளை பாதுகாக்கும் வழிமுறைகளை பார்க்கலாம்.

வீட்டுத் தோட்டத்தில் நட்டு வளர்க்கும் மரக்கன்றுகள் பெரும்பாலும் காம்பவுண்ட் சுவருக்குள் வளர்க்கப்படுவதால் தொல்லைகள் இல்லை. ஆனால் பொது இடங்களான பூங்காக்கள், சாலை ஓரங்களில் வளரும் மரங்களை ஆடு, மாடுகள் தின்று விட வாய்ப்புண்டு. இதனால் இது போன்ற இடங்களில் வளர்க்கும் மரங்களை சுற்றி செங்கலை வைத்து சுவர் எடுப்பது பாதுகாப்பானது. ஆனால் இது போல் செங்கல் சுவர் எடுக்க அதிக செலவாகும். சிலர் இந்த செங்கல்லையும் கூட எடுத்து போய் விடுவார்கள். எனவே இதற்கு பதிலாக மெல்லிய கம்பி கொண்டு வலை போன்ற அமைப்பை செய்து வைக்கலாம். டயமண்ட் மெஸ் எனப்படும் இந்த வலைகள் பெரிய செலவு ஆகாது. 4 சவுக்கு கம்புகளை நட்டு அதைச்சுற்றி இந்த வலையை சுற்றி விடலாம்.

நட்ட மரங்களை பராமரிக்கும் முறை

வீட்டு தோட்டங்களில் வளரும் பழ மரங்களை அவ்வப்போது தேவையில்லாத பட்டுப்போன இலை, காம்புகளை கழித்து வருவது நல்லது. இதனால் மரங்கள் அழகாக தோற்றமளிக்கும். உதிர்ந்த இலைகளை சேர்த்து உரமும் தயாரிக்கலாம். வீட்டின் முகப்பில் இருக்கும் மரங்கள் வளரும் போதே நமது கற்பனைக்கு தகுந்தபடி இழுத்துக்கட்டியும், வளைத்தும், நிமிர்த்தியும் வேண்டிய வண்ணம் அழகுபடுத்த முடியும். 

பாட்டில் பிரஷ் என்று ஒரு மரம் உண்டு. வீட்டு தோட்டத்தில் இவற்றை வளர்க்கும் போது தோட்டத்தில் 5 அடி நீளத்திலும் 3 அடி அகலத்திலும் சிறிய செயற்கை நீர் நிலை போல் உருவாக்கி அதற்கருகில் இந்த மரங்கள் இருக்குமாறு செய்தால், மிக அழகாக வளைந்து நீரை தொடும் இவற்றின் கிளைகள் மனதுக்கு ரம்மியமாக இருக்கும். 
பழமரங்களையும், அழகு மரங்களையும், நிழல் தரும் மரங்களையும் வளர்ப்பதற்கு நமது நாட்டில் தனித்தனியே இடங்களை ஒதுக்குவது அவசியம். இதற்கு அரசாங்கம் தனியே திட்டம் ஒதுக்க வேண்டும். 

இப்படி ஒதுக்கப்படும் இடங்களில் மாலை நேரத்தில் ஓய்வு பெற்றவர்கள் பொழுதை கழிக்க பயன்படுத்தலாம். இந்த இடங்களில் நல்ல காற்று கிடைப்பதால் உடலுக்கு நல்லது. குறிப்பாக பள்ளிக்கூடங்களில், மருத்துவமனைகளில் இது போன்று பலவகை மரங்கள் கலந்த விரிந்து பரந்த தோட்டத்தை உருவாக்கி வைக்கலாம். இந்த தோட்டங்களில் வந்து பார்க்கும் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் மரம், செடி, கொடிகளின் மீது ஆர்வம் ஏற்படும். மருத்துவமனைகளில் நடும் போது நோயாளிகளுக்கு நல்ல தூய்மையான காற்று கிடைக்கும். 

ஆயிரக்கணக்கில் மரக்கன்றுகள் உருவாக்க நாற்றங்கால்..

தேர்வு செய்யப்படும் மண் நல்ல வளமுடன் இருக்க வேண்டும். உங்களது நிலத்தில் என்ன வகையான சத்துக்கள் இருக்கிறது என்பதை கண்டறிய அருகில் உள்ள விவசாய அலுவலகத்தில் சென்று மண் மாதிரியை கொடுத்து பரிசோதனை செய்து மண்ணில் உள்ள சத்துக்களை எல்லாம் கண்டறிந்து கொள்ளலாம். இதனால் எந்த சத்துக்குறைபாடாக இருக்கிறது, எது அதிகம் இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதற்கேற்ப உரங்களை இட்டு மண்ணின் வளத்தை நடுநிலைப்படுத்திக் கொள்ளலாம். செடிகளை உண்டாக்க தேர்வு செய்யப்படும் இடமானது களிமண் நிலமாக இருக்கக்கூடாது. அது போல் கடுமையான வெயில் இருக்கும் பட்சத்தில் நாற்றங்கால் அமைக்கும் போது தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் வெயில்தடுப்பு வலைகளை பயன்படுத்தலாம்.
 
எரு போடும் விதம்

தேர்வு செய்யப்பட்ட இடத்தை நன்றாக மண்வெட்டி கொண்டு கொத்தி விட வேண்டும். இப்படி கொத்தப்பட்ட நிலத்தில் சாணம், தழைஉரம் கலந்த எருவை இட வேண்டும். இதனால் அங்கு முளைக்க வைக்கப்படும் கன்றுகளை பிடுங்கும் போது பெரிய அளவுக்கு செடிகளுக்கு அதிர்ச்சி ஏற்படாது. கடினமான மண்ணில் முளைத்திருக்கும் கன்றுகளை பிடுங்கும் போது அந்த செடிகளுக்கு கடுமையான அதிர்ச்சி ஏற்படும். செடிகள் உண்டாக்குவதற்கு முதலில் பாத்திகளை உருவாக்க வேண்டும். இந்த பாத்திகள் என்பது வரிசையான ஒரு மண்குவியல் அமைப்பு என்று வைத்துக் கொள்ளலாம். இந்த பாத்திகள் கிழக்கு மேற்காக 25 அடிக்கு 5 அடி அகலமாக இருக்கலாம். அதில் 6 அங்குலத்திற்கு ஒரு விதை என்ற கணக்கில் ஏறக்குறைய 500 கன்றுகளை உருவாக்கலாம். 
 

விதை போடும் விதம்
ஆறு அங்குலத்திற்கு ஒன்றாக விதை ஊன்றி மண்ணால் மூடவேண்டும். மேல் உரை கடினமாக உள்ள விதைகளை சாணக்கரைசலில் ஊற வைத்து போடுவது நல்லது. சில விதைகளை வெயிலில் வைத்து சூடாக உள்ள தண்ணீரில் சிறிது நேரம் போட்டு வைத்து பிறகு விதைக்கலாம். விதையிட்ட பின், தினமும் காலையில் நீர் விட வேண்டும். நடுப்பகலில் செடிகளில் ஒளிச்சேர்க்கை நடப்பதால் மாலைக்காலத்தை விட காலையில் நீர் விடுவதும் நல்லது. 

களை எடுக்கும் விதம்

புல் பூண்டு இல்லாமல் அவ்வப்போது களைகளை எடுக்க வேண்டும். களை பிடுங்காது, நீர்விடுவதில் கவனம் செலுத்தினால் கன்றுகளை காட்டிலும் களைகள் மண்டிவிடும். பருவமழைக்கு பிறகு விதை போடுவது ஏற்ற காலமாகும்.

 
நாற்று நடும் விதம்

நாற்றுக்களை பிடுங்கி பாலீதின் கவரில் மாற்றும் போது அல்லது வேறு இடத்தில் கன்றுகளை நடும் போது, செடிக்கன்றில் வேரில் மண் இருக்குமாறு எடுக்க வேண்டும். இப்படி ஒரு பாத்தியில் இருந்து எடுக்கப்பட்ட கன்றை வேறு பாத்திக்கு மாற்றி வெயில் காலம் முடியும் வரை போதிய அளவு தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். மழைக்காலத்தில் இதே பாத்தியில் வளர விட்டு விட்டு பிறகு மற்றொரு பாத்திக்கு மாற்றி வளர்க்க வேண்டும்.

இப்போது கன்று ஒரளவு வளர்ந்திருக்கும் என்பதால் மூன்றடிக்கு ஒரு கன்றாக வேறொரு பாத்தியில் நட வேண்டும். இரண்டு முறை பிடுங்கி நடுவதால் கன்றுக்கு அதிர்ச்சி ஏற்பட்டாலும் அது சமாளிக்க பழகி விடும். இதற்கடுத்து இந்த பாத்தியிலிருந்து எடுத்து பாலீதின் கவரில் போட்டு விற்பனைக்கு அனுப்பலாம்.  கன்றுகளை பிடுங்கி நிலத்தில் நடும் முன் கவரில் இருந்தோ, பாத்திகளில் இருந்து எடுக்கும் போதோ நீர் விட்டு அறுந்து போகாமல் சிறிது மண்ணுடன் எடுக்க வேண்டும் என்பது முக்கியமானது.
 
பனியில் இருந்து பாதுகாப்பு

கன்றுகளை சிறிது மூடி வைப்பதாலும், நீர் விடுவதாலும், மண்ணைக்கிளறி விடுவதாலும் மூடுபனியின் கொடுமையிலிருந்து செடிக்கன்றுகளை பாதுகாக்கலாம். இப்படி வளர்த்து பாதுகாத்து எடுக்கப்படும் கன்றுகள் நட்ட முதல் ஆண்டிலேயே நன்றாக வேர் விட்டு கிளைத்து விடும்.


மரங்களை எப்படி நடுவது எங்கு நடுவது...


 

8வெள்ளி,ஜூலை,



மரம் நடுவதற்கு மூன்று நான்கு தினங்களுக்கு முன்கூட்டியே இடத்தை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் குழி தோண்ட வேண்டும். குழிகள் நெருக்கமாக இருக்க கூடாது. பல மரங்களை ஒரேயிடத்தில் நெருக்கி வளர்ப்பது கூடாது. கன்றுகள் வளர்ந்து மரமாகும் போது அவற்றின் பருமனை மனதில் வைத்துக் கொண்டு குழி தோண்ட வேண்டும். குட்டையான மரங்களாக இருந்தால் 15 அடிக்கு ஒன்றாகவும், பெருமரங்களை 30 அடிக்கு ஒன்றாகவும் நடலாம். குழிகளை நான்கடி சதுரமாகவும், ஆழமாகவும் தோண்ட வேண்டும்.

பொதுவாக, மரங்களை நட மார்ச் மாதவாக்கில் குழிகளை தோண்டி ஏப்ரல் மே மாதங்கள் வரை குழியை காய போட்டு வைக்க வேண்டும். ஜுன் மாதத்தில் நல்ல எருவையும், மண்ணையும் ஐந்துக்கு ஒன்றாக கலந்து தரை மட்டம் வரை குழிகளை நிரப்ப வேண்டும். புது எருவிற்கு கரையான்கள் வந்து விடும். எனவே பழைய உரம் தான் நல்லது. குழியில் தோண்டிய மண், சுண்ணாம்பு சத்து நிறைந்ததாக இருந்தால் அதை அப்புறப்படுத்தி வேறு நல்ல மண்ணைக் கொட்ட வேண்டும். இரண்டு தடவை நல்ல மழை பெய்த பின்பு குழி மண் தானே அழுந்தி விடும். அப்போது குழிகளில் மரக்கன்றுகளை நட்டால் அவை நன்கு வளரும்.

செழித்து வளர
நீர்ப்பாசன வசதியுள்ள இடங்களில் கன்றுகளை பிப்ரவரி மாதத்தில் நடுவது நல்லது. நீர் பாயும் வசதியுள்ளாத இடங்களில் ஜுலை மாதக்கடைசியில் மரக்கன்றுகளை நடலாம். சிறிய தொட்டிகளில் இருக்கும் மரக்கன்றுகளை வாங்கி வந்தால், தொட்டியிலிருந்து கன்றுகளை பிடுங்கும் போது வேரைச்சுற்றியுள்ள மண்ணை கலைக்கக்கூடாது. ஒடிந்து போன கிளைப்பகுதிகளையும், அறுந்து போன வேர்ப்பகுதிகளையும் நீக்கி விட வேண்டும். கன்று நட வேண்டிய குழியில் முதலில் ஓர் ஆழமான துளை போட வேண்டும். வேர்கள் மடங்காமலும், துளையில் கன்றை நடும் பொழுது வேர்ப்பகுதி முழுவதும், குழியின் தரைமட்டத்திற்குள்ளாக இருக்கும் படி வைக்க வேண்டும். மிக ஆழமாக வைப்பது கூடாது. இப்படி கவனமாக நடாவிட்டால் மரக்கன்று நசித்து போகும். அல்லது பட்டு போகும்.


ஒரே குழியில்
கன்று நட்டவுடன் நிறைய தண்ணீர விட வேண்டும். ஒன்று பட்டு போனாலும் இன்னொன்று வளர்ந்து விடும் என்ற எண்ணத்தில் ஒரே குழியில் இரண்டு மரக்கன்றுகளை நடுவது கூடாது. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு உள்பட்ட கன்றுகள் சில நாட்களில் குழியில் தரித்து விடும். 

கன்று நட்ட சில நாட்களில் குழிகளில் புல் முளைக்க தொடங்கும். இதனால் குழிகளை ஆறப்போட வேண்டியது அவசியம். இலையுதர் மரக்கன்றுகள் முதலில் தழைமரக்கன்றுகளை காட்டிலும் புல் வளர்ச்சியால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. அதிலும் பழமரங்களை குழிகளில் தோன்றும் புல் நசிக்க செய்து வளரவிடாமல் செய்துவிடும். 

களை கொத்து கொண்டு புல்லை வெட்டி எடுத்து விட வேண்டும். 
நீர் ஊற்ற
நமது நாட்டில் உள்ள மரங்கள் பெரும்பாலும் மார்ச், ஏப்ரல் ஆகிய வெப்ப நாளிலும், ஜுலை முதல் செப்டம்பர் ஆகிய தட்பவெப்ப நாளிலும் அதிகமாக வளர்கின்றன. அதனால் மார்ச் முதல் ஜுன் வரை குறைந்தது ஐந்தாறு தடவையும் இவற்றிற்கு நீர் விட வேண்டும். ஒவ்வொரு தடவையும் குழி நிறையும் அளவு நீர் ஊற்ற வேண்டும்.

மரத்தின் வேர்ப்பகுதிக்கு நீர் சென்று சேராவிட்டால் மரத்தின் வளர்ச்சி குன்றிவிடும். தண்ணீர் பாய்ச்சுவதால் மரங்கள் தழைத்து வளரும். புது இலைகள் விடும். அப்போது நீராவிக் போக்கு அதிகமாகும். எனவே, நீர்ப்பாசன வசதியுள்ளாத இடங்களில் உள்ள மரக்கன்றுகளுக்கு மார்ச் மாத்தில் அதிகமான நீர் விடாமல் இருப்பதே நல்லது. அதிகம் நீர் விடும் போது நீராவிப் போக்கு மிகுந்து கன்று பட்டு போய் விடும்.

கொழு கொம்பு 
இரண்டாவது ஆண்டில் கன்றுகள் கிளைத்து மரமாக நன்கு வளரும் போது ஒரு செழிப்பான கிளையை வைத்துக் கொண்டு மற்றக்கிளைகளை வெட்டிவிட வேண்டும். அப்படி வெட்டப்பட்ட வெட்டு வாயில் உடனடியாக தார் வைத்து அடைத்து விட வேண்டும். மரம் நேராக வளர , மூங்கில் அல்லது நேரான கழியை கொண்டு கொழுகொம்பாக இணைத்து, பழந்துணியை இடையில் கொடுத்து வாழை நார் கொண்டு கட்ட வேண்டும். கம்பி கொண்டு கட்டுவதும் ஆணி அடிப்பதும் மரத்திற்கு ஊறு செய்யும். அதன் மூலமாக காளான் உட்சென்று மரத்தை அழித்து விடும். மரம் நிலைத்து நன்கு வளர்ந்த பின்னர் கொழு கொம்பை அகற்றி விட வேண்டும்.

வீட்டுத் தோட்டத்தில் வளர்க்கும் இளமரங்களை காப்பதில் தொல்லை இல்லை. பொது இடங்களில் உள்ள மரங்களை காப்பது தான் சிறிது கடினம்.