Sunday, October 7, 2012

பலன் தரும் பசுமைக் கூடாரம்!


வேளாண்மைத் தொழில்நுட்பத்தில் 200 ஆண்டுகள் பழைமையானதாக இருந்தாலும், இந்தியாவில் புதிய தொழில்நுட்பமாக உள்ள பசுமைக் கூடாரத்தில் பயிர் சாகுபடி முறை மிகவும் பலன் தரும் வழிமுறையாக உள்ளது.
நமது நாட்டில் 95 சத பயிர்கள் வயல் வெளிகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சில வகைப் பயிர்களை எல்லாவித தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளர்க்க இயலாது. இந்தப் பயிர்களுக்கு ஏற்ற சூழல்நிலையை உருவாக்கினால் மட்டுமே எந்த இடங்களிலும் இந்தப் பயிர்களை வளர்க்க முடியும்.

பசுமைக் கூடாரம்: 

பசுமைக் கூடார தொழில்நுட்பம் என்பது பயிர்களுக்கு சாதகமான சுற்றுப்புறச் சூழலை வழங்குவதேயாகும். காற்று, குளிர், மழை அதிகப்படியான சூரிய ஒளி, அதிக வெப்பநிலை, பூச்சி நோய்களிலிருந்து செடிகளைப் பாதுகாக்க இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவியாக உள்ளது.
பசுமைக் கூடாரம் என்பது ஒளி ஊடுருவக்கூடிய அல்லது பிளாஸ்டிக் கூரையினால் போர்த்தப்பட்ட அமைப்பாகும். இந்தக் கூடாராத்தினுள் பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சலுக்குத் தேவையான தட்ப வெப்பநிலை எளிதில் கிடைக்கும். கரியமிலவாயு உள்புறத்திலேயே தங்கி விடுவதால் தாவரத்தின் ஒளிச் சேர்க்கைக்கு அதிகப்படியான கரியமில வாயு கிடைக்கிறது. இதன் மூலம் பயிர்களில் 5 முதல் 10 மடங்கு அதிக ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது.
இதன் காரணமாக விளைச்சல் அதிகமாகவும், தரமான விளைபொருள்களும் கிடைக்கின்றன. மேலும், மண்ணிலிருந்து ஆவியாகும் நீரும் உள்புறத்திலேயே தங்கிவிடுவதால் ஈரப்பதமும் அதிகமாகிறது. குறைந்த நீர்ப்பாசனமே தேவைப்படும்.

பயன்கள்-நன்மைகள்:

 பூச்சி, நோய், எலிகள் மற்றும் பறவைகள் பயிரைத் தாக்குவதிலிருந்து
பாதுகாக்கலாம். அதிகமான வெப்பம், பெரும் மழை, அதிவேகக் காற்றுகளால் பயிருக்குச் சேதம் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. பூச்சிக் கொல்லிகள், பூசணக் கொல்லிகள், உரங்கள் ஆகியவை சரியான அளவில் உபயோகிக்கலாம். ஆண்டு முழுவதும் எந்தப் பயிரையும் உற்பத்தி செய்யலாம்.
சந்தையில் பருவமில்லா காலத்தில் வரும் விளைபொருள்களுக்கு அதிக வரவேற்பும், அதிக விலையும் கிடைக்கும். எனவே, அத்தகைய தருணங்களில் பசுமைக் கூடார உற்பத்தி முறை பெரிதும் உதவியாக இருக்கும். காய்கறிகளைப் பதப்படும் தொழில்சாலைகளுக்குத் தேவையான காய்கறிகளை தொடர்ந்து உற்பத்தி செய்து வழங்க முடியும்.
50 நாடுகளில் பயன்: பசுமைக் கூடார அமைப்புகள் இப்போது உலகில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் வணிக ரீதாயாக அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் 2.8 பில்லியன் டாலர்கள் ஈட்டக் கூடிய மலர் சாகுபடி, 400 ஹெக்டர் பரப்பில் பசுமைக் கூடார முறையில் மேற்கொள்ளப்படுகிறது. ஜப்பானில் 54 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பசுமைக் கூடார உற்பத்தி முறை உள்ளது. இந்தியாவில் 1980-ம் ஆண்டுதான் பசுமைக் கூடாரத் தொழில்நுட்பம் தொடங்கப்பட்டது. முதலில் ஆராய்ச்சி செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இப்போதுதான் உலகமயமாக்கல், வேளாண் விளைபொருள் ஏற்றுமதியால் பசுமைக் கூடார தொழில்நுட்பத்துக்கான தேவை அதிகரித்து வருகிறது.
உள்ளூர் சூழ்நிலைகளுக்குத் தகுந்தபடி பயிர் வகைகள் பயிரிடும் வகையில் இந்தக் கூடாரங்களை அமைக்க முடியும். 4 வகை பசுமைக் கூடார முறைகள் உள்ளன.
குறு நுட்ப பசுமைக் கூடாரம்: இந்த வகை கூடாரத்தில் காலநிலைக் காரணிகள் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்காது. மூங்கில் கட்டைகள், பாலீத்தின் பைகள் உபயோகப்படுத்தி கட்டப்படும். பூச்சிகளை கட்டுப்படுத்தும் வலைகளையும் பயன்படுத்தலாம். வெயில் காலங்களில் பக்கச் சுவர்களை திறந்து வைப்பதன் மூலம் வெப்ப நிலையைக் குறைக்கலாம். இந்த வகை கூடாரம் குளிர்ப் பிரதேசங்களுக்கு ஏற்றவையாகும்.
மித நுட்ப பசுமைக் கூடாரம்: இயந்திரங்ளைக் கொண்டு இந்த வகை கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. இரும்புக் கம்பிகளைக் கொண்டு அமைக்கப்படுவதால் வேகமாக வீசும் காற்றை எதிர்த்து நிற்கும் தன்மை கொண்டவை. காற்று வெளியேற்றி விசிறிகள், பனிப்புகை குழாய்கள், குளிர்விக்கும் பட்டைகள் ஆகியவற்றை பயன்படுத்தி கூடாரத்தில் தேவையான அளவு வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றை நிலவச் செய்ய முடியும். பயிர் பருவம் முழுவதும் தேவைக்கேற்ப சூழலை மாற்றிக் கொள்ளலாம். தரமான மலர்களை இந்த வகையில் உற்பத்தி செய்ய முடியும். வறண்ட வானிலை உள்ள பகுதிகளில் இந்தக் கூடாரங்கள் உகந்தவையாகும்.
உயர்நுட்ப பசுமைக் கூடாரம்: முழுமையான தானியங்கி காலநிலைக் கட்டுப்பாட்டு இயந்திரங்களைக் கொண்டவை. இந்த வகை கூடாரம் அமைக்க செலவு அதிகமாக இருந்தாலும் தரமான உற்பத்திப் பொருள்களை வழங்குவதால் செலவை ஈடு செய்யலாம். இந்தக் கூடாரத்தில் வெப்பநிலை, ஈரப்பதம், வெளிச்சம் போன்ற காரணிகளின் அளவை ஓர் உணர் கருவியானது உள் வாங்கிக் கொள்ளும். அந்த கருவியில் உள்ளவற்றை சரிபார்த்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
மலைச் சரிவுகளுக்கான கூடாரம்: சமனற்ற கூரைகளைக் கொண்ட பசுமைக் கூடாரங்கள் மலைச் சரிவுகளில் கட்டுப்படும். சரிவுகளுக்குத் தகுந்தபடி வெவ்வேறு அளவுகளில் அமைக்கப்படும். தானியங்கி காலநிலைக் கட்டுப்பாடுகள் பயன்படுத்துவதில்லை. இதேபோல், பிளாஸ்டிக் பசுமைக் கூடாராங்களை குறைந்த செலவில் அமைக்கக் கூடியது. புற ஊதாக்கதிர்கள் கொண்டு மேம்படுத்தப்பட்ட தாள்களால் அமைக்கப்படும் இந்தக் கூடாரங்கள் 4 ஆண்டுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

No comments:

Post a Comment