Thursday, January 3, 2013

தெரிந்து கொள்வோம்...மிளகு...


மிளகு..!

தாவரப் பெயர் -: PIPER NIGRUM.

"பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது சித்தர்கள் சத்தியவாக்கு. மிளகு அந்த அளவிற்கு நஞ்சுமுறிப்பானாக செயல்படுகிறது. "சீதச்சுரம், பாண்டு, சிலேத்மங்கிராணி, குன்மம், வாதம், அருசி பித்தம், மாமூலம் -ஓது சந்தி யாச மபஸ் மாரம், அடன் மேகம், காசமிவை நாசங் கறி மிளகினால்" என்று சித்தர் தேரையர் கூறியுள்ளார்.

உணவில் தினமும் மிளகு இரசம் இடம்பெற்றாலே போதுமானது. இது தங்கபஸ்மத்திற்கு இணையானது. கால்சியம, இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாது உப்புக்களும், கரோட்டின் தயாமின், ரிபோபிளவின், ரியாசின் போன்ற வைட்டமின்களும் மிளகில் தாராளமாக உள்ளன.

வளரியல்பு -

இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும், கேரளாவிலும், குடகு மலையிலும் அதிகமாகப் பயிராகிறது. இந்தியாவிலிருந்து பிற நாடுகளுக்கு பரவியது . மிளகு ஒரு கொடிவகையைச் சார்ந்தது. இதன் இலைகள் வெற்றிலை போல் பெரிதாக இருக்கும். இதன் காய்கள் ஒரு சரத்திற்கு 20-30 க்கு மேல் இருக்கும். முற்றிய பழத்தைப் பறித்து வெய்யிலில் நன்கு காயவைத்தால் இதுவே மிளகு. இதன் கொடியை கட்டிங் செய்து இனப்பெருக்கம் செய்யலாம்.

மருத்துவப் பயன்கள்-

விஷத்தை முறிக்கும் தன்மை கொண்டது என்பதை குறிக்கவே “பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்றார்கள் நம் முன்னோர்கள்.

பாட்டி காலத்தில் தினமும் இரண்டு மிளகுகள் சாப்பிட்டு வந்தனர். தினம் இரண்டு மிளகு சாப்பிடுவதன் மூலம் வயிறு சம்பந்தமான பிரச்சனை எட்டிப் பார்க்காது.

மிளகு சாப்பிடும் போது வயிற்றில் சுரக்கும் ஹைட்ரோக்ளோரிக் அமிலம் வயிற்றில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளை சரிசெய்கிறது. மிளகு சேர்த்த உணவு உடலில் உள்ள வியர்வைகளை வெளியாக்குவதுடன் எளிதில் சிறுநீரை கழிக்கவும் உதவுகிறது.

மிளகின் வெளிப்புற கருப்பு அடுக்கு, கொழுப்பின் காரணமாக உண்டாகும் உயிரணுக்களை முறிப்பதற்கு உதவுகிறது.. எனவே மிளகு கலந்த உணவை சாப்பிட்டு வருவதன் மூலம் எடையை குறைக்கலாம்.

உடலுக்கு நலன் தரக்கூடியதில் மிளகும் ஒன்று. இது சுவாசக்கோளாறுகளுக்கு நிவாரணத்தை தருகிறது. மேலும் இருமல், மலச்சிக்கல், ஜலதோசம், செரிமானம், இரத்தசோகை, ஆன்மைக்குறைவு, தசை விகாரங்கள், பல் பாதுகாப்பு, பல் சம்பந்தமான நோய்கள் வயிற்றுபோக்கு இதய நோய் போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது.

மிளகு சருமநோயை குணப்படுத்துவதற்கும் பயன்படுகிறது. இது தோலில் காணப்படும் வெண்புள்ளிகளின் நிறமியை அழிக்கிறது. ஆரம்பகட்ட வெண்புள்ளிகளை தடுப்பதற்கு மிளகை பயன்படுத்த வேண்டும்.
ஆக்சிஜனேற்றியாக செயல் படும் மிளகு புற்றுநோய் இதயநோய் கல்லீரல் போன்றவற்றில் ஏற்படும் ஆரம்பகட்ட பிரச்சனையை எதிர்த்து செயல் படும்

தொண்டைக் கம்மல், தொண்டை வலி, வயிற்றில் உண்டாகும் வாய்வுத் தொல்லைகள் நீங்க மிளகை நன்கு பொடி செய்து 50 கிராம் எடுத்துக் கொண்டு, அதனோடு தண்ணீர் 600 மி.லி. சேர்த்து 30 நிமிடங்கள் நன்றாகக் காய்ச்சி வடிகட்டிக் கொண்டு, 25 மி.லி. அளவாக மூன்று வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

சளி, ஜலதோஷம் அதிகமாக இருந்தால், மிளகு ஒரு ஸ்பூன் எடுத்து நெய்யில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு தினமும் மூன்று வேளை அரை ஸ்பூன் பொடியைச் சாப்பிடுவது நல்லது இரண்டு நாள்களிலேயே நல்ல மாற்றத்தை காணலாம்..

மிளகு, அபினி, பொரித்த பெருங்காயம் இவை ஒவ்வொன்றையும் 2 கிராம் எடுத்து நன்கு அரைத்து பத்து மாத்திரைகளாகச் செய்து 1 மணி நேரத்திற்கு 1 மாத்திரை வீதம் கொடுத்து வர வாந்தி பேதி நிற்கும்.

பால்வினை நோய்களில் பல வகை உண்டு. அதில் ஒன்று பிறப்புறுப்புக்களில் புண்கள் தோன்றுவது. இது குணமாக மிளகுத்தூள் 10 கிராம், எருக்கன் வேர் 18 கிராம் என இரண்டையும் போதிய அளவு பனை வெல்லத்துடன் சேர்த்து நன்கு அரைத்து, கடுகளவு மாத்திரையாகச் செய்து காலை, மாலை ஒரு மாத்திரை வீதம் சாப்பிட்டு வர வேண்டும்.

சிலருக்கு தலையில் முடி உதிர்ந்து வழுக்கை போலாகி விடும். இதை புழுவெட்டு என்பார்கள். இதற்கு மிளகுத்தூள், வெங்காயம், உப்பு மூன்றையும் அரைத்து தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் தேய்த்து வர முடி முளைக்கும்.

மிளகு எல்லாவித விஷங்களுக்கும் ஒரு சிறந்த முறிவாகப் பயன் படுகிறது. ஒரு கைப்பிடி அறுகம் புல்லையும், பத்து மிளகையும் இடித்து தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து அருந்தி வந்தால் சகல விஷக்கடிகளும் முறிந்துவிடும்.

சாதாரண ஜலதோசத்திற்கு காய்ச்சலுக்கும் நன்கு காய்ச்சிய பாலில் ஒரு சிட்டிகை மிளகுப் பொடியும், ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியும் கலந்து இரவில் ஒரு வேளை அருந்தி வர நல்ல பலன் தரும்.

சுளுக்கு கீல் வாத வீக்கம் முதலியவைகளுக்கு ஒரு மேஜைக் கரண்டி மிளகுத் தூளை சிறிது நல்லெண்ணெய் கலந்து நன்கு சுட வைத்து அதைப் பற்றுபோட்டு வர சரியாகும்.

மிளகுத் தூளும் சாதாரண உப்புத் தூளும் கலந்து பல் துலக்கி வர பல்வலி, சொத்தைப் பல், ஈறுவலி, ஈற்றிலிருந்து ரத்தம் வடிதல், வாயில் துர்நாற்றம் ஆகியவை விலகும்.

மிளகைப் ஒரு ஸ்பூன் எடுத்து அதை பொடி செய்து, சிறிதளவு உப்பு சேர்த்து சூடாக்கி சிறிதளவு நெய் சேர்த்து சாப்பிட்டால் வயிற்று உப்புசம், பசியின்மை போன்றவை உடனே குணமாகும்.

மிளகை அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும், மிளகைச் சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும். சளியும் குணமாகும். பொடி போல் மூக்கில் உறிஞ்ச தலைவலி தீரும்.

மிளகையும், தும்பைப் பூவையும் சம அளவு எடையில் சேர்த்து அரைத்து மிளகளவு மாத்திரையாக்கி உலர்த்தவும், இதில் 2-3 சாப்பிட்டு வெந்நீர் குடிக்க குளிர் காய்ச்சல் குணமாகும்.

100 கிராம் வில்வ இலை சூரணத்துடன் 10 கிராம் மிளகுத் தூள் சேர்த்து நாளும் 5 கிராம் தேனில் சாப்பிட்டு வர இரண்டு வருடத்தில் ஆஸ்துமா குணமாகும்.

சிறு குறிஞ்சான் இலை உலர்த்திய சூரணத்துடன் பத்தில் ஒரு பங்கு வால் மிளகுத்தூள் சேர்த்து 5 கிராம் தேனில் நாளும் சாப்பிட 6 மாதத்தில் நீரிழிவு குணமாகும்.

அரை கிராம் மிளகுப் பொடியுடன் 1 கிராம் வெல்லம் கலந்து காலை மாலை சாப்பிட்டு வரப் பீனிசம், தலை பாரம், தலைவலி தீரும்.

தொண்டை வலி இருந்தால், கொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு ஆகிய மூன்றையும் சேர்த்து வாயில் போட்டு மென்றால் தொண்டை வலி படிப்படியாக குணமாகும்.

அல்சர் உள்ளவர்கள் மிளகு அதிகம் சேர்த்து கொள்ள கூடாது.

சமையலில் மிளகாய் தூளை குறைத்து மிளகை அதிகம் சேருங்கள். மிளகு தூள் செய்து வீட்டில் எப்போதும் வைத்துகொள்ளுங்கள். கடைகளில் விற்கப்படும் மிளகு தூளை தவிருங்கள். ஆரோக்கிய வாழ்விற்கு மிளகு மிக அவசியம் என்பதை மறவாதீர்கள் !!

Monday, December 10, 2012

வாழை இலை







தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெறுகின்றோம் என்று நம் எல்லோருக்கும் தெரியும் . நாம் இப்போது வாழை இலையின் மகத்துவம் , அதன் பயன்பாடுகள் என்னென்ன என்று பார்ப்போம் . நிறைய பயன்பாடுகள் உண்டு . நாம் இந்த வாழை இலையில் இருந்து பல தேவைகளை பூர்த்தி செய்கின்றோம் .
நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .
வாழை இலை என்று சொன்னாலே நமக்கெல்லாம் ஞாபகத்தில வருவது சாப்பாடு. இதனை நாம் பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.
வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் . வாழை இலையின் பயன்பாட்டை அறிந்து கொள்ளுங்கள் .
மேலும்


1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
:-
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள்வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
:-
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
:-
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
:-
5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
:-
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
:-
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்டஇடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
:-
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான் அதுவும் எங்க கொங்கு மண்ணில் தலை வாழை இலையுடன் தான் விருந்தே நடக்கும். அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும்.
:-
நான் வார இறுதிநாட்களில் எங்க ஊரில் தான் இருப்பேன். ஊரில் இருக்கும் நாட்களில் மதிய உணவு நிச்சயம் தலை வாழை இலையில் தான் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது. 
:-
இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும். ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம்.
:-
இலையில் சாப்பிடும்போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
:-
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.
:-
வாழைமரத்தில் குருத்தை கொஞ்சம் கிளரி விட்டு (வாழை நீர் தேங்குமளவுக்கு) சீரகம் கொஞ்சம் போட்டு சின்ன வாழை இலையால் கிளறிய பகுதியை மூடி வைத்து அதில் ஊறும் நீரை பருகினால் பேதி, வயிற்று வலி போன்றவை நீங்கும்.

Monday, October 8, 2012

மாமரத்தின் பயன்கள்


 மாமரம்









மாமரத்தின் பூர்வீகம் இந்தியா . குறிப்பாக தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம் அதிக மாமரம் உள்ள மாவட்டமாகும். மாமரம் 35 - 40 மீ உயரம் வளரக்கூடிய பெரிய மரமாகும். இதன்
 இலைகள், எப்போதும் பசுமையாகவும் மாற்றடுக்காகவும் அமைந்துள்ளன. கொழுந்து இலைகள் கருஞ்சிவப்பாகவும், வளர வளர பச்சையாகவும் மாறுகின்றன. பூக்கள் கிளை நுனியில் கொத்தாகத் தோன்றுகின்றன. மிதமான இனிய மணத்தையும் கொண்டுள்ளன.

மாமரம் வளர்ப்பது எளிது; மேலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இரகங்கள் வெவ்வேறு குணங்களுடன் கிடைக்கின்றன. உலகிலேயே, அதிகம் அப்படியே உண்ணப்படும் பழம் என்ற சிறப்பு மாம்பழத்தையே சாரும். 

இந்திய மாம்பழ வகைகள் பெரும்பாலும் ஒட்டு மூலம் உற்பத்தி செய்யப்படுகின்றன. வேகமாக வளரக்கூடிய இரகத்தை சேர்ந்த ஒரு வருட மாங்கன்றின் மேல் விருப்பப்படும் இரகத்தினை ஒட்டுவது பொதுவான முறையாகும். சிலநேரம், மண்ணுக்கேற்ப உகந்த இரகங்களின் மேல் சிறந்த குணமுடைய மா இரகங்கள் ஒட்டப் படுகின்றன. இந்தியசீன வகை இரகங்கள் சில விதையிலிருந்தும் வளர்க்கப்படுகின்றன. 

முதல் சில ஆண்டுகள் அடிப்பாகத்தில் 3 அடி உயரம் வரை கிளைகள் வளராமல் கழித்து விடுவது நல்லது. அதன் பிறகு மாமரங்கள் தாமாகவே விரும்பத்தகுந்த நிலைக்கு வளரும்.

இதன் இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, மரப்பட்டை, வேர், பிசின் போன்றவை மருந்தாகப் பயன்படுகிறது.

மாந்தளிர்

நீரிழிவு உள்ளவர்கள், மாவின் கொழுந்து இலையை உலர்த்தி பொடி செய்து தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும். தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.

தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும். மாவிலைச் சாறுடன் தேன், பால் மற்றும் சிறிதளவு நெய் சேர்த்து அருந்தினால் ரத்தத்துடன் பேதியாவது நிற்கும். மாவிலையை மென்றுவந்தால் ஈறுகள் பலமாகும். மாவிலையின் நடுநரம்பை மைபோல் அரைத்து இமை மேல் வரும் பருக்கள் மீது தடவினால் அவை குணமாகும்.

மாம்பூ

உலர்ந்த பூக்களில் டானின் என்கிற சத்து உள்ளது. மாம்பூவைக் குடிநீரில் இட்டுக் குடித்தால் வயிற்றுப்போக்கு, சிறுநீரக நோய்கள், பால்வினை நோய்கள் ஆகியன குணமாகும். மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து தூளாக்கி அதனுடன் நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் போதும்.

மாம்பிஞ்சு

இளம் மாவடுக்களை எடுத்து காம்பு நீக்கி காயவைத்து, உப்பு நீரில் போட்டு ஊறவைத்து வெயிலில் காயவைத்து வைத்துக்கொண்டு உணவுடன் சேர்த்து சாப்பிட்டால், சீரண சக்தி அதிகரிக்கும். வாந்தி, குமட்டல் நீங்கும்.

மாங்காய்

பல் ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவையும் ரத்த சோகையையும் நீக்கும் திறன் கொண்டது. பாத வெடிப்புகளுக்கு மாங்காயின் சாற்றைப் பூசினால் குணமாகும். காயின் தோலைக் கையளவு எடுத்து நெய்விட்டு வதக்கி, சர்க்கரை சேர்த்துச் சாப்பிட்டால் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்படுவது நிற்கும். காயின் தோலை அரைத்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து மோருடன் கலந்து குடித்துவந்தால் ரத்த மூலமும் வயிற்றுப்போக்கும் தீரும்.

மாங்காயை சமைத்துச் சாப்பிடுவது நல்லது. அல்லது ஊறுகாய் செய்து சாப்பிடலாம். மாங்காய் அதிகம் சாப்பிட்டால், பசியின்மை, புண் ஆறாமை, பல் கூச்சம், சிரங்கு போன்றவை உண்டாகும்.

காம்பு

காம்பில் இருந்து வெளிப்படும் பால், படர்தாமரை மற்றும் சொறி சிரங்கு ஆகியவற்றைக் குணமாக்கும்.

மாம்பழம்

மாம்பழத்தில் வைட்டமின் 'ஏ’ சத்து அதிக அளவில் உள்ளது. மாம்பழம் மலச்சிக்கலைப் போக்கும். ரத்தத்தை விருத்தி செய்து கண் பார்வையைத் தெளிவாக்கும். விந்தணுக்களை அதிகப்படுத்தி, உடலை அழகுடன் திகழச் செய்யும்.
பருப்பு, கசகசா, சுக்கு, ஓமம் இவற்றுடன் பழச்சாறு விட்டு அரைத்து, நெய் சேர்த்துக் கொடுத்தால் கடுமையான வயிற்றுப்போக்கும் குணமாகும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும்.
இதனை கிடைக்கும் காலங்களில் அளவோடு சாப்பிட்டு வந்தால் சிறந்த பயனை அடையலாம்.

மாங்கொட்டை

பருப்பைப் பொன்னிறமாக வறுத்துத் தூளாக்கி உண்டால் வயிற்றுப்போக்கு, வெள்ளைப்படுதல், அதிகமான ரத்தப்பெருக்கு ஆகியன கட்டுப்படும். பருப்புப் பொடியை அரை ஸ்பூன் அளவு எடுத்து நீருடன் இரவில் உண்டு வந்தால் குடலில் உள்ள புழுக்கள் நீங்கும். வெட்டுக்காயம், தீக்காயம் ஆகியவற்றைக் குணப்படுத்தப் பருப்பை அரைத்துப் பூசலாம். மாம்பருப்பை எடுத்து பொன்னிறமாக வறுத்து தூள் செய்து 1 ஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சரும எரிச்சல் நீங்கும்.

மாம்பிசின்

கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
தேமல், படை உள்ளவர்கள் மாம்பிசினை மாம்பழச்சாறுடன் கலந்து பூசினால் தேமல், படை நீங்கும்.

மா மரப்பட்டை

இதனுடன் கோரைக்கிழங்கு சேர்த்து அவித்துப் பிழிந்து அதிவிடயம் மற்றும் இலவங்கப் பிசின் சேர்த்துக் குடித்தால் வயிற்றுப்போக்குடன் கூடிய காய்ச்சல் நீங்கும். மாம்பட்டையை நல்லெண்ணெயுடன் சேர்த்துக் காய்ச்சிய எண்ணெயைப் பயன்படுத்தித் தலைக்குக் குளித்தால் மேக வியாதி, வெள்ளைப்படுதல், விஷக்கடியால் ஏற்படும் வலி ஆகியன குணமாகும். மரப்பட்டையை ஊறவைத்த குடிநீரைக் கொப்பளிக்கப் பல்வலி நீங்கும்.

இலையிலிருந்து வேர் வரை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டிருக்கும் மாமரத்தை வீட்டிற்கு ஒரு மரமாவது நட்டு வளர்ப்போம், ஆரோக்கியம் பெறுவோம். அருஞ்சுவையான மாம்பழங்களை சுவைத்து மகிழ்வோம்
.


Sunday, October 7, 2012

பலன் தரும் பசுமைக் கூடாரம்!


வேளாண்மைத் தொழில்நுட்பத்தில் 200 ஆண்டுகள் பழைமையானதாக இருந்தாலும், இந்தியாவில் புதிய தொழில்நுட்பமாக உள்ள பசுமைக் கூடாரத்தில் பயிர் சாகுபடி முறை மிகவும் பலன் தரும் வழிமுறையாக உள்ளது.
நமது நாட்டில் 95 சத பயிர்கள் வயல் வெளிகளிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில் சில வகைப் பயிர்களை எல்லாவித தட்பவெப்ப சூழ்நிலைகளிலும் வளர்க்க இயலாது. இந்தப் பயிர்களுக்கு ஏற்ற சூழல்நிலையை உருவாக்கினால் மட்டுமே எந்த இடங்களிலும் இந்தப் பயிர்களை வளர்க்க முடியும்.

பசுமைக் கூடாரம்: 

பசுமைக் கூடார தொழில்நுட்பம் என்பது பயிர்களுக்கு சாதகமான சுற்றுப்புறச் சூழலை வழங்குவதேயாகும். காற்று, குளிர், மழை அதிகப்படியான சூரிய ஒளி, அதிக வெப்பநிலை, பூச்சி நோய்களிலிருந்து செடிகளைப் பாதுகாக்க இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவியாக உள்ளது.
பசுமைக் கூடாரம் என்பது ஒளி ஊடுருவக்கூடிய அல்லது பிளாஸ்டிக் கூரையினால் போர்த்தப்பட்ட அமைப்பாகும். இந்தக் கூடாராத்தினுள் பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சலுக்குத் தேவையான தட்ப வெப்பநிலை எளிதில் கிடைக்கும். கரியமிலவாயு உள்புறத்திலேயே தங்கி விடுவதால் தாவரத்தின் ஒளிச் சேர்க்கைக்கு அதிகப்படியான கரியமில வாயு கிடைக்கிறது. இதன் மூலம் பயிர்களில் 5 முதல் 10 மடங்கு அதிக ஒளிச்சேர்க்கை நடைபெறுகிறது.
இதன் காரணமாக விளைச்சல் அதிகமாகவும், தரமான விளைபொருள்களும் கிடைக்கின்றன. மேலும், மண்ணிலிருந்து ஆவியாகும் நீரும் உள்புறத்திலேயே தங்கிவிடுவதால் ஈரப்பதமும் அதிகமாகிறது. குறைந்த நீர்ப்பாசனமே தேவைப்படும்.

பயன்கள்-நன்மைகள்:

 பூச்சி, நோய், எலிகள் மற்றும் பறவைகள் பயிரைத் தாக்குவதிலிருந்து
பாதுகாக்கலாம். அதிகமான வெப்பம், பெரும் மழை, அதிவேகக் காற்றுகளால் பயிருக்குச் சேதம் ஏற்படுவதும் தடுக்கப்படுகிறது. பூச்சிக் கொல்லிகள், பூசணக் கொல்லிகள், உரங்கள் ஆகியவை சரியான அளவில் உபயோகிக்கலாம். ஆண்டு முழுவதும் எந்தப் பயிரையும் உற்பத்தி செய்யலாம்.
சந்தையில் பருவமில்லா காலத்தில் வரும் விளைபொருள்களுக்கு அதிக வரவேற்பும், அதிக விலையும் கிடைக்கும். எனவே, அத்தகைய தருணங்களில் பசுமைக் கூடார உற்பத்தி முறை பெரிதும் உதவியாக இருக்கும். காய்கறிகளைப் பதப்படும் தொழில்சாலைகளுக்குத் தேவையான காய்கறிகளை தொடர்ந்து உற்பத்தி செய்து வழங்க முடியும்.
50 நாடுகளில் பயன்: பசுமைக் கூடார அமைப்புகள் இப்போது உலகில் 50-க்கும் மேற்பட்ட நாடுகளில் வணிக ரீதாயாக அமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் ஆண்டுதோறும் 2.8 பில்லியன் டாலர்கள் ஈட்டக் கூடிய மலர் சாகுபடி, 400 ஹெக்டர் பரப்பில் பசுமைக் கூடார முறையில் மேற்கொள்ளப்படுகிறது. ஜப்பானில் 54 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் பசுமைக் கூடார உற்பத்தி முறை உள்ளது. இந்தியாவில் 1980-ம் ஆண்டுதான் பசுமைக் கூடாரத் தொழில்நுட்பம் தொடங்கப்பட்டது. முதலில் ஆராய்ச்சி செயல்பாடுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. இப்போதுதான் உலகமயமாக்கல், வேளாண் விளைபொருள் ஏற்றுமதியால் பசுமைக் கூடார தொழில்நுட்பத்துக்கான தேவை அதிகரித்து வருகிறது.
உள்ளூர் சூழ்நிலைகளுக்குத் தகுந்தபடி பயிர் வகைகள் பயிரிடும் வகையில் இந்தக் கூடாரங்களை அமைக்க முடியும். 4 வகை பசுமைக் கூடார முறைகள் உள்ளன.
குறு நுட்ப பசுமைக் கூடாரம்: இந்த வகை கூடாரத்தில் காலநிலைக் காரணிகள் முழுமையான கட்டுப்பாட்டில் இருக்காது. மூங்கில் கட்டைகள், பாலீத்தின் பைகள் உபயோகப்படுத்தி கட்டப்படும். பூச்சிகளை கட்டுப்படுத்தும் வலைகளையும் பயன்படுத்தலாம். வெயில் காலங்களில் பக்கச் சுவர்களை திறந்து வைப்பதன் மூலம் வெப்ப நிலையைக் குறைக்கலாம். இந்த வகை கூடாரம் குளிர்ப் பிரதேசங்களுக்கு ஏற்றவையாகும்.
மித நுட்ப பசுமைக் கூடாரம்: இயந்திரங்ளைக் கொண்டு இந்த வகை கூடாரங்கள் அமைக்கப்படுகின்றன. இரும்புக் கம்பிகளைக் கொண்டு அமைக்கப்படுவதால் வேகமாக வீசும் காற்றை எதிர்த்து நிற்கும் தன்மை கொண்டவை. காற்று வெளியேற்றி விசிறிகள், பனிப்புகை குழாய்கள், குளிர்விக்கும் பட்டைகள் ஆகியவற்றை பயன்படுத்தி கூடாரத்தில் தேவையான அளவு வெப்பநிலை, ஈரப்பதம் ஆகியவற்றை நிலவச் செய்ய முடியும். பயிர் பருவம் முழுவதும் தேவைக்கேற்ப சூழலை மாற்றிக் கொள்ளலாம். தரமான மலர்களை இந்த வகையில் உற்பத்தி செய்ய முடியும். வறண்ட வானிலை உள்ள பகுதிகளில் இந்தக் கூடாரங்கள் உகந்தவையாகும்.
உயர்நுட்ப பசுமைக் கூடாரம்: முழுமையான தானியங்கி காலநிலைக் கட்டுப்பாட்டு இயந்திரங்களைக் கொண்டவை. இந்த வகை கூடாரம் அமைக்க செலவு அதிகமாக இருந்தாலும் தரமான உற்பத்திப் பொருள்களை வழங்குவதால் செலவை ஈடு செய்யலாம். இந்தக் கூடாரத்தில் வெப்பநிலை, ஈரப்பதம், வெளிச்சம் போன்ற காரணிகளின் அளவை ஓர் உணர் கருவியானது உள் வாங்கிக் கொள்ளும். அந்த கருவியில் உள்ளவற்றை சரிபார்த்து தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாம்.
மலைச் சரிவுகளுக்கான கூடாரம்: சமனற்ற கூரைகளைக் கொண்ட பசுமைக் கூடாரங்கள் மலைச் சரிவுகளில் கட்டுப்படும். சரிவுகளுக்குத் தகுந்தபடி வெவ்வேறு அளவுகளில் அமைக்கப்படும். தானியங்கி காலநிலைக் கட்டுப்பாடுகள் பயன்படுத்துவதில்லை. இதேபோல், பிளாஸ்டிக் பசுமைக் கூடாராங்களை குறைந்த செலவில் அமைக்கக் கூடியது. புற ஊதாக்கதிர்கள் கொண்டு மேம்படுத்தப்பட்ட தாள்களால் அமைக்கப்படும் இந்தக் கூடாரங்கள் 4 ஆண்டுகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

Wednesday, September 12, 2012

முதலாம் ஆண்டு திருமண கொண்டாட்டம்...

முதலாம் ஆண்டு திருமணநாள் கொண்டாட்டம்


அன்பு சொந்தங்களுக்கு வணக்கம் என்னுடைய முதலாம் ஆண்டு திருமண நாளில் என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றிகள் பல கோடி....

என்னுடைய திருமண நாள் கொண்டாட்டமாக என்னாள் முடிந்த உதவியாக என்னுடைய கிராமத்திற்க்கு அருகிலுள்ள இருளர் சமுதாயத்தை சேர்ந்த 160 மாணவர்களுக்கும்,சமுதாயத்தில் பின் தங்கியுள்ள 66 மாணவர்களுக்கும் அவர்களின் படிப்பிற்கு தேவையான உபகரணங்களையும் இனிப்பையும் நானும் எனது மனைவியாரும் பள்ளி
மாணவர்களுக்கு வழங்கினோம்.



அப்போது மாணவர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சியை பாத்தது மீண்டும் கிடைக்காத ஒரு நிகழ்வு...



பள்ளியை சேர்ந்த தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் எங்களுக்கு பொன்னடை போர்த்தி எங்களை வாழ்த்திய நினைவு எங்களால் மறக்க முடியாத ஒன்று..

என் முதலாம் ஆண்டு திருமணநாள் என் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு.. இணைய உறவுகளும் இதனை பின்பற்றி மற்றவர்களிடமிருந்து வேறுபடுவோம்..


புகைப்படங்களில் சில...