Monday, October 24, 2016

வலிகள் நிறைந்தது வாழ்க்கை

வலிகள் நிறைந்தது வாழ்க்கை


ஒருவரை இழக்கும் போது
வரும் கண்ணீரை விட,

அவர்களை இழக்க கூடாது
என்று நினைக்கும் போது

வரும் கண்ணீருக்கு தான்
வலி அதிகம்!!

அனாதையாக வாழ்வது மேல்

 அனாதையாக வாழ்வது மேல்....


தேவை முடிந்தவுடன் விலகும் நண்பர்கள்..
சொத்து இருந்தால் உறவாடும் சொந்தங்கள்..
பணம் இருந்தால் பாசம் காட்டும் பந்தங்கள்..

இவர்களுடன் இருப்பதை விட, அனாதையாக வாழ்வது மேல்...

வாழ்க்கை


வாழ்க்கை

வாழ்க்கையில் எல்லாம் கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்காதே!
சில விஷயங்கள் கிடைக்காமல் இருப்பதே வாழ்க்கைக்கு நல்லது!!

Saturday, August 27, 2016

மரம் வளர்த்தால் பணம் வளருமா?

மரம் வளர்த்தால் பணம் வளருமா?

மரம் வளர்ப்பது என்பதை கேட்டவுடன் ஏதோ ஓசோன் படலம் ஓட்டை  விழாமல் தடுக்கவும், மாதம் மும்மாரி  பொழியவும்  இவர்களை   எல்லோரும் மரம் வளர்க்க சொல்வதாக நம்  மக்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள்.மரம் வளர்ப்பில் இருக்கும் உண்மையான லாபத்தை பற்றி தெரிந்தால்  தரிசு நிலங்களை நம் நாட்டில் பார்ப்பது என்பதே அரிது ஆகிவடும்.

இதை பற்றி பெரிதாக தெரிந்துகொள்ள ஒன்றும் இல்லை.உதாரணமாக ஒருவர் 5 ஏக்கர் நிலம் வைத்து இருக்கிறார் என்று வைத்து கொள்ளுங்கள்.சுத்தமாக தண்ணீர் கிடையாது வானம் பார்த்த பூமி, முழுவதும் மழையை நம்பி தான் விவசாயம் பார்க்க முடியும்  என்ற நிலையில், அவர் 
ஏக்கருக்கு 400  மரங்கள் விதம சுமார் 2000  பெரு மரம் ( பிய மரம் (அ ) பியன் மரம் ) கன்றுகளை மழை காலத்தில் நட்டு  பராமரித்து வந்தால் ,அவர் அடையும் லாபம் ஒரு சாப்ட்வேர் என்ஜினியர் பெரும் சம்பளத்துக்கு ஈடானது.

பிய மரம் என்பது வறட்சி நிலங்களுக்கு மிக உகந்தது.கடும் வறட்சியையும்  தாங்ககுடியது. மிக வேகமாக வளர
கூடியது, குறைந்த பட்ச நீர்வளம் இதற்கு போதுமானது,மழையை மட்டுமே நம்பி கூட இதை நட்டு வளர்க்கலாம்.

4  வருடங்கள்  வளந்த ஒரு மரமானது ,மிக குறைந்த பட்சம் ஒரு 1000  ரூபாய்க்கு போனால் கூட 5   
ஏக்கர் மரம் நட்ட ஒருவர் சுமார் 20  லட்சம் ருபாய்  பெற முடியும். மழையை மட்டும் நம்பி இருக்காமல்  மாதம் சுமார் 2000  அல்லது 3000  செலவு செய்து ,காசு கொடுத்து தண்ணீர் வாங்கி ஊற்றினால் கூட நட்டம் ஒன்றும் இல்லை..இது போல சந்தன , அகர் ,மழை வேம்பு போன்ற  மரங்களை ,மண்ணின் தரத்திக்கு  ஏற்ப  பயிர் செய்து ,பலம் பெறலாம்.




எனவே மழை இல்லை, விளைச்சல் இல்லை என்று புலம்பிக்கொண்டு ,தோட்டம் காடு எல்லாம் விற்றுவிட்டு  வேறு தொழில் செய்யலாம் என்று விவசாயிகள் எண்ணாமல் ,இது போல லாபம் தரும் முறைகளை பின்பற்றி  பயன் பெறலாமே..

இனி வரும் காலம் உழவர் காலம் ,நம்மை நம்பியே உலகம்.. 

மரம் வளர்த்தால் பணம் வளரும் !!!!

Wednesday, June 15, 2016

நலமாய் வாழ சில வழிகள்

30 ஆண்டுகள் வளர கூடிய மரத்தை கூட வெறும் மூன்று மாதங்களில் வளர்ப்பது எப்படி?



“இன்ஸ்டன்ட்” மரம் வளர்ப்பு!

அரசாங்கம் / பொறுப்பில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய வேலையை தனி மனிதர்கள் ஆர்வமாக செய்து வருகிறார்கள்.

என்னதான் தனி மனிதர்கள் தங்களின் கடும் முயற்சியில் சாதிக்க முடிந்தாலும், அரசாங்கத்தின் ஒத்துழைப்பு இல்லாமல் பெரியளவில் சாதிக்க முடியாது.

லட்சத்தில் / கோடியில் ஒருவர் விதிவிலக்காக இருக்கலாம். இது போல கூறினாலும், புலம்பிக்கொண்டு மட்டும் இருக்காமல், எதைப் பற்றியும் கவலைப்படாமல் தங்கள் கடமையை / பணியை விருப்பமாக செய்பவர்கள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள்.

இவர்கள் தான் நம்மைப் போன்ற புலம்பல் காரர்களுக்கு ஒரு ஆறுதலாக இருக்கிறார்கள்.

இது போல ஒருவர் தான் அர்ஜுனன். இந்த ஃபாஸ்ட் ஃபுட் உலகத்தில் நமக்கு எல்லாமே உடனே நடக்க வேண்டும் என்று விருப்பம். எது செய்தாலும் உடனே விடை தெரிய வேண்டும், யாருக்கும் காத்திருக்க பொறுமையில்லை. காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் அந்த விசயத்தையே புறக்கணித்து டாடா சொல்லி விடுகிறார்கள்.

இங்கிலிஷ்க்காரன் படத்தில் சத்யராஜ், “”கர்ப்பமான” பெண்ணையே திருமணம் செய்து கொண்டால் வேலை மிச்சம் பாருங்க” என்று கூறுவாரே! அதே போல் ஆட்கள் பலர் இருக்கிறார்கள்.

இதனாலோ என்னவோ அர்ஜுனன் மரம் வளர்க்க ஆகும் காலத்தை எப்படி குறைத்து பயன் பெறுவது என்று யோசித்து ஒரு எளிமையான முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

இப்போ ஃபாஸ்ட்ஃபுட் உலகம். ‘பனை வெச்சவன் பார்த்துட்டு சாவான்’ங்கிற மாதிரி காத்துக்கிட்டு இருக்க முடியாது.

எல்லாமே சீக்கிரமா கிடைக்கணும். மரமா இருந்தாலும் உடனே அனுபவிக்கணும்.

அதனாலதான் மரம் வளர்க்கிற யுக்தியிலும் ஃபாஸ்ட் ஐடியாவை நான் கடைப்பிடிக்கிறேன்னு” சொல்கிறார் செப்பறை வளபூமி பசுமை உலகம் அமைப்பை நடத்தும் அர்ச்சுனன்.
.

மணியாச்சி ரயில் நிலையத்தில் டீக்கடை நடத்தி வந்தவர் அர்ஜுனன். பால் குடித்த மகன் மூச்சு திணறி இறந்தபின் வாழ்வின் மீது வெறுப்பு ஏற்பட்டதாம்.

என்ன பாவம் செய்தேனோ? ஒருவேளை மகனோ, நானோ செத்து அடுத்த பிறவியில் பறவையா, விலங்கா பொறந்தா நாம தங்கறதுக்கு இடம் வேணுமே? இருக்கிற மரத்தையெல்லாம் வெட்டிடுறாங்களேன்னு கவலை வந்ததாம். அப்போ தோன்றியதுதான் மரம் வளர்ப்பு.

ஆனால், மற்றவர்களைப் போல விதை போட்டு நாற்று வெச்சு மரம் வளர்த்தா எந்தக் காலத்துல நடக்கிறதுன்னு வேகமா வளர்க்கிற வழியைக் கண்டுபிடித்தாராம்.

.




90 நாட்களில் மரம் வளர்ப்பது எப்படி?

செடி நட்டு, அது மரமாக வளர ஆண்டுக் கணக்காகும். அதனால், மரக்கிளைகளை வெட்டி, நட்டு, மரங்களாக உருவாக்கும் முயற்சி செய்தேன். விதை போட்டு மூன்றாண்டுகளில் வளரக்கூடிய மரக்கன்றுகள், மரக்கிளைகளை வெட்டி நட்டால் 90 நாட்களிலேயே மரமாக வளர்ந்து விட்டன. மரக்கிளைகளை வெட்டி நட்ட ஆயிரம் மரங்கள் இராஜவல்லிபுரத்தைச் சுற்றி உள்ளன. இதை என் சொந்தச் செலவிலேயே செய்தேன். மேலும் எங்கள் ஊர் குளத்துக்கரையைச் சுற்றிலும் பனங்கொட்டைகளை சும்மா விதைத்து வைத்தேன். தற்போது சுமார் 2,000 பனைகள் குருத்துவிட ஆரம்பித்துள்ளன.

கடந்த மூன்றாண்டுகளில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், கோயில்கள், தனியார் நிறுவனங்களுக்கு 27 ஆயிரம் மரங்களை இலவசமாக வழங்கியுள்ளேன்" என்கிறார் அர்ஜுனன்.
.

90 நாட்களில் மரம் வளர என்ன செய்ய வேண்டும்?

# பெரிய மரத்தின் நடுத்தர அளவு உடைய கிளைகளின் கம்புகளை 6 அடி நீளத்தில் வெட்ட வேண்டும்.

# ஒரு சிமெண்ட் கோணிப்பையில் மண் நிரப்பி வைத்துக்கொண்டு, கம்பின் பச்சைத்தன்மை மாறுவதற்குள் நட்டு விட வேண்டும்.

# கால்நடைகளின் சாணம் போன்ற இயற்கை உரங்களே போதுமானது. குறைந்தளவு நீர் ஊற்றிவர வேண்டும்.

# நடப்பட்ட கம்பை அசைக்கவோ, மாற்றவோ கூடாது. கால்நடைகள் இலையை மேய்ந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படிப் பராமரித்தால், 30 நாள்களில் தளிர ஆரம்பித்து விடும். 90 நாள்களிலிருந்து நிழல் கொடுக்கிற அளவுக்கு மரம் வளர்ந்துவிடும்.

# வேம்பு, அத்தி, மா, பூவரசு போன்ற தமிழக தட்பவெப்ப நிலைக்கு உகந்த அனைத்து மரங்களையும் இம்முறையைப் பயன்படுத்தி வளர்க்கலாம்.
.

ஆடு, மாடு, நாற்றைத் தின்னுடும். வெயிலில் காய்ஞ்சுடும்னு கவலையில்லாம ஒரு ஃபாஸ்ட் ஃபுட் மாதிரி ஒரு ஃபாஸ்ட் ட்ரீ ரெடி என்கிறார் அர்ச்சுனன்.

மரம் தேவைப்படும் கிராம பஞ்சாயத்துகள் விரும்பினால், ஒரு கிராமத்திற்கு 1,000 மரங்கள் வரை இலவசமாகக் கொடுக்கத் தயாராக உள்ளேன். தனிநபர்கள் என்றால், பயிற்சி தர தயாராக உள்ளேன்" என்கிறார் அர்ஜுனன். அவரை தொடர்புகொள்ள (9791426281, 9790395796, 9500378441, 9500378449)
.

அரசு கொஞ்சம் உதவினால்… 20 மீட்டர் இடைவெளியில் 700 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்னை முதல் குமரி வரை நாற்கரச் சாலையில் 35 ஆயிரம் மரங்களை நட்டால் ஒரு மினி காட்டுக்குள் ஏஸிக்குள்ளே தமிழ்நாடே இருக்கும்.

ம்ம்… யாருக்கும் இந்த அருமை புரியலை,” என்று அங்கலாய்த்துக் கொள்கிறார் ஃபாஸ்ட் ட்ரீ அர்ச்சுனன்.

அப்படி இருந்தால் எப்படி இருக்கும் என்று, மனம் கணக்குப் போட ஆரம்பித்து விட்டது . ரொம்ப அருமையான அதே சமயம் நடைமுறையில் சாத்தியமான ஒரு செயல்.

இதற்கு அர்ஜுனன் கூறியது போல அரசாங்கம் ஒத்துழைப்பு இல்லை என்றால், ஒரு வெங்காயச் செடி கூட நட முடியாது.
.

ஏங்க எல்லோரும் இப்படி மரத்தோட அருமை தெரியாம / புரியாம இருக்காங்க!! செம மன உளைச்சலாக இருக்கிறது. “ஜெ” கடந்த ஆட்சியில் ஒரு சிறப்பான அறிவிப்பு செய்தாங்க. அது, கண்டிப்பாக அனைவரும் “மழை நீர் சேகரிப்பு திட்டம்” செயல்படுத்த வேண்டும் என்று.

இதனால் சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் தாறுமாறாக உயர்ந்தது. நம்ம ஊர்ல தான் இது போல நல்லது செஞ்சா பிடிக்காதே! வழக்கம் போல இதற்கும் எதிர்ப்பு. ஓட்டு போய்டுமே என்ற பயத்தில் தேர்தல் சமயத்தில் இந்த உத்தரவை “ஜெ” வாபஸ் செய்தார்.

உருப்படியா இருந்த ஒரு உத்தரவும் டமால் ஆகி விட்டது.

இது போன்ற “மழை நீர் சேகரிப்பு” திட்டத்திற்கு தான் கிறுக்கனுக எதிர்ப்பு தெரிவிப்பாங்க ஆனால், இது போல நெடுஞ்சாலையில் மரம் வைக்க யாரும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை.

“ஜெ” மட்டும், நெடுஞ்சாலை முழுக்க மரம் வைத்தே ஆக வேண்டும் என்று ஒரு அதிரடி உத்தரவைப் போட்டால், பொறுப்பில் உள்ளவர்கள் அலறி அடிச்சுட்டு செய்ய மாட்டார்களா!

மரம் பட்டுப் போனால் பொறுப்பில் உள்ளவர்களுக்கு வேட்டு என்று கூடுதலா ஒரு அறிவிப்பையும் வெளியிட்டால், அவனவன் ஒழுங்கா வேலையைப் பார்க்க மாட்டானா!!

இப்படி எல்லாம் நடந்தால் நல்லா இருக்குமே என்று கற்பனையில் மட்டுமே நினைத்து சந்தோசப்பட முடிகிறது. என்னமோ போங்க!

எந்த ஆட்சி வந்தாலும் இதே நிலை தான். பொறுப்பில் உள்ளவர்களுக்கு எப்படி பணம் சம்பாதிப்பது என்பதில் மட்டுமே முழுக் கவனமும் உள்ளது.

மக்களைப் பற்றி / வருங்காலத்தில் [வருங்காலம் எங்கே..! இப்பவே அப்படித்தான் இருக்கு] நாம் அனைவரும் எதிர்கொள்ளப் போகும் பிரச்னை பற்றி யாருக்கும் கவலையில்லை.

அடுத்த தலைமுறை நபர்கள் எல்லோரும் மரத்தைப் பார்த்தால்.. “அதோ பாருங்க! அங்கே ஒரு மரம்!” என்று கூற வேண்டிய நிலையில் தான் இருப்பார்கள்.

என்னுடைய ஆதங்கம் எல்லாம், அனைத்து வசதிகளும் / வளங்களும் இருந்தும் பொறுப்பில் உள்ளவர்கள் அக்கறையின்மையால் / திறமையின்மையால் / புறக்கணிப்பால் இப்படி தமிழகம் படாதபாடு படுகிறதே என்பது தான்!

எனவே இதைப் படிக்கும் உங்களை நான் கேட்டுக்கொள்வது, அரசியல்வாதிகளை / அதிகாரிகளை திட்டும் முன்பு நாம் நம் அளவில் என்ன செய்தோம் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அவர்களை கை காட்டும் வழக்கமான சமாளிப்பு செயலை கை விட்டு, நம்மால் என்ன செய்ய முடியும் என்று முயன்று சிறு முயற்சி எடுத்தால் கூட போதும்.

ஒன்றுமில்லாமல் போவதற்கு சில விஷயங்களாவது நடக்கும். நம்மைப் போலவே நினைக்காமல் அர்ஜுனன் போன்றவர்கள் முயற்சி செய்வதால் தான், இது போன்ற விசயங்களுக்கு சிறு நம்பிக்கை கிடைத்து வருகிறது.

உங்கள் வீட்டில் இடம் இருந்தால், இது போல ஒரு மரமாவது வையுங்கள்.. அட! முடியாத பட்சத்துக்கு ஒரு செடியாவது வைங்க. மனமிருந்தால் மார்க்கம் உண்டு.

இது பற்றி தெரியாதவர்கள் இதைப் படிக்க நேர்ந்தால் ஒருத்தராவது முயற்சிக்க மாட்டார்களா! என்ற ஆதங்கத்தில் இதை பகிர்கிறேன். 

Wednesday, August 5, 2015

வேப்ப மரம்- வேம்பு

வீட்டு வாசலில் வேம்பு - நிழலுக்காகவும் குளிர்ச்சியான காற்றுக்காகவும் நம் முன்னோர்கள் பின்பற்றிய வழக்கம் இது. கிராமங்களில் வழிபாடு தொடங்கி பல் துலக்குவது வரை வேப்ப மரம்தான் வரம்!
வேம்பின் தாவரவியல் பெயர் 'அஸாடிராக்டா இண்டிகா’ (Azadirachta indica). அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்தி என்பவை இதன் வேறு பெயர்கள். இது கடுமையான வெப்பத்தையும் வறட்சியையும் தாங்கி வளரும் இயல்புடையது.
வேப்ப மரக் காற்று நோய்களை அண்ட விடாது என்பது கிராமப்புற மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இதனாலேயே, கோயில்களில் புனித மரமாகப் போற்றப்படுகிறது. பச்சை வேப்பன் இலைகளைச் சுடு தணலில் வாட்டும்போது வெளிவரும் புகை, கொசுக்களை ஓட ஓட விரட்டும். வேப்ப மரத்தில் இருந்து பிரித்து எடுக்கப்படும் 'அஸாடிராக்டின்’(Azadirachtin) என்னும் வேதிப் பொருளில் இருந்து பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கப்படுகின்றன. வேப்ப மரத்தின் தண்டுப் பகுதி கட்டுமானப் பணிகளுக்கு உதவுகிறது. அதன் பிசின், கோந்து தயாரிக்கும் மூலப் பொருள் ஆகும்.
வேப்ப மரத்தின் மருத்துவக் குணங்களைப் பற்றி நம்மிடம் விவரித்தார் புதுச்சேரி சைதன்யா ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவமனையின் தலைமை சித்த மருத்துவர் ஆர்.கல்பனா.
'வேப்ப மரத்தின் எண்ணற்ற பலன்களின் காரணமாக, இதைக் 'கற்பக விருட்சம்’ என்றே சொல்வார்கள். இந்த மரத்தின் ஒவ்வொரு பாகமும் அதிகமான பயன்களைக்கொண்டது.
இலை: வேப்பங்கொழுந்துடன் ஓமம், மிளகு, பூண்டு, சுக்கு, நொச்சிக் கறிவேப்பிலை, சோம்பு, சிற்றரத்தை ஆகியவற்றைத் தனித் தனியாக நெய்விட்டு வதக்கி, உப்புப் போட்டு, நீர் விடாமல் மைபோல் அரைத்து எடுத்துத் தண்ணீரில் கரைத்துக்கொள்ளவும். குழந்தைகளுக்கு உண்டாகும் மந்தம், வயிற்றுப் பொருமல், மார்புச் சளி போன்ற பிரச்னைகளுக்கு இந்தக் கரைசலைக் கொடுத்துவந்தால் நல்ல குணம் கிடைக்கும். இது, குடற்புழுக்களையும் நீக்கும். புண்களைக் கழுவவும், வேப்ப இலைகள் போட்டு ஊற வைத்த நீரைப் பயன்படுத்தலாம்.
வேப்பங்கொழுந்துடன் குன்றிமணி அளவுக்கு வேர்ச் சூரணத்தைச் சேர்த்து அரைத்து தினம் மூன்று முறை கொடுத்தால், அம்மை நோய் குணமாகும்.
வேப்பிலையைத் தனியாகவோ அல்லது மஞ்சளுடன் சேர்த்தோ வெந்நீர்விட்டு அரைத்துப் பூசினால், சொறி சிரங்கு, வீக்கம் மற்றும் அம்மைப் புண் ஆகியன குணமாகும். வேப்பிலையை நீரில் நன்கு ஊறவைத்துப் பின் உலர்த்தி உப்பு சேர்த்துப் பல் துலக்கினால், பயோரியா நோய் கட்டுப்படும்.
பூ: வேப்பம் பூக்களை நெய்விட்டு வதக்கி, உப்பு, புளி, வறுத்த மிளகாய், கறிவேப்பிலை இவற்றுடன் சேர்த்து அரைத்துத் துவையல் செய்து சாதத்துடன் பிசைந்து சாப்பிட்டால், நா வறட்சி, ஏப்பம், சுவை இன்மை, வாந்தி ஆகியன குணமாகும். வயிற்றுப் புழு நீக்கியாகவும் இது செயல்படும். வேப்பம் பூவில் வடகம் மற்றும் ரசம் போன்றவையும் தயாரித்து உண்ணலாம். சுவையாக இருக்கும்.
காய்: மிகவும் கசப்புச் சுவையை உடையது. காய்ச்சலைக் குணமாக்கும் தன்மை கொண்டது.
விதை: புழு நீக்கியாகச் செயல்படும். கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது. விதைகளை அரைத்துப் புழு உண்டாகிவிட்ட புண்களின் மேல் தடவினால், புண்களில் இருந்து புழுக்கள் வெளியேறுவதோடு புண்ணும் விரைவில் ஆறும்.
வேப்ப எண்ணெய்: வேம்பின் விதையில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயுடன் எருக்கு இலையைச் சேர்த்து ஒத்தடம் கொடுத்தால், பிடரி வலி போன்ற அனைத்து வலிகளுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
பட்டை: வேப்பன் பட்டையை நீரில் இட்டுச் சூடாக்கி 30 அல்லது 45 மி.லி. அளவில் குடித்துவந்தால், காய்ச்சல் குணமாகும். உடல் சோர்வையும் நீக்கும். வேப்ப மரப் பட்டையைப் பொடி செய்து, நான்கில் இருந்து எட்டு கிராம் வீதம் தினம் இருவேளை உட்கொண்டால், வாந்தி, சுவையின்மை ஆகியன நீங்கும்.
பிசின்: உலர்த்தி சூரணம் செய்து இரண்டில் இருந்து ஆறு கிராம் அளவில் உட்கொண்டால், மேகரோகம் குறையும்.
புண்ணாக்கு: வேப்பன் புண்ணாக்கு, பயிர்களுக்கு நல்ல உரமாகும். இதை இடித்துப் பொடி செய்து வறுத்துத் தலைவலிக்குப் பற்று போடலாம்.