Tuesday, February 21, 2012

புகையிலையை நிறுத்து...


புகையிலை நிறுத்தி- பூமிக்குப் புண்ணியம் தேடு!





               
புகையிலைப் பழக்கம் சிலரை மட்டுமே அடிமையாக்கி வைத்திருந்த காலம் மாறி, புகையிலைப் பழகா இளம் சந்ததியினரே இல்லையென்ற காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புகை - பிடிப்பவர்களுக்கு மட்டுமல்ல, அருகில் நிற்பவர்களுக்கும் பகைதான்.
                           
புகை பிடிக்கும் பழக்கத்தால், நாள்தோறும்  இரண்டாயிரத்து ஐநூறு பேர் இறப்பதாகச் சொல்கிறது உலக சுகாதார நிறுவனம்ஆறு விநாடிக்கு ஒருவர் புகையிலையின் புண்ணியத்தால், பூமியைவிட்டே செல்கின்றனர். மக்கள்தொகை பெருக்கம் மனம் கலங்க செய்கிறதென்றால், புகையிலைப் பழக்கம், பல உயிகளைப் பலி வாங்கி, பூமிக்குப் புண்ணியம் தேடிக்கொடுக்கின்றது. 
                                       புகையிலை என்றதும் நம் நினைவிற்கு வருவது, சிகரெட் என்ற ஒன்றுதான். ஆனால், ’புகையில்லாப் புகையிலையின்  பயன்பாடு சத்தமின்றி நம்  சந்ததியை எதிர்த்து, யுத்தம் ஒன்றைத் துவக்கிவிட்டது. இளைய சமுதாயத்தினர் மத்தியில், ஸ்டைலிற்காக  ஆரம்பமாகும் இப்பழக்கம், நாளடைவில் நம்மை அடிமையாக்கிஇது இல்லையென்றால், இனி உயிர் வாழப்போவதில்லையென்ற விரக்தி மனப்பான்மைக்கு வித்திடுகின்றது. 




ஆண் பெண் அடிமைகள்:  
                         சிகரெட் பிடிக்கும் பழக்கம் ஆண்களுக்கே உரியது என்று மட்டும் எண்ணிட வேண்டாம். 51 சதவிகித ஆண்கள் புகை பிடித்தலுக்கு அடிமை என்றால், 11 சத்விகித பெண்களும் இப்பழக்கத்திற்கு அடிமையானவர்களே. பத்து வயதிற்குள், புகைப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் 37 சதவிகிதம் பேர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி, 55 சதவிகித இளைஞர்களும், 32 சதவிகித இளைஞிகளும் புகைப் பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்.
                           ஒரு சிகரெட்டில், நான்காயிரம் வேதிப்பொருட்கள் உள்ளன. அதில் நாற்பத்திமூன்று, புற்று நோயை உருவாக்கும் ஆற்றல் படைத்தவை. ஆண்டொன்றில், அறுபது லட்சம் பேர், மெல்லும் புகையிலையினாலும், புகைக்கும் சிகரெட்டினாலும் உயிர் துறக்கின்றனர். அடுத்த இருபது ஆண்டுகளில், இது ஒரு கோடியாகுமென்று உலக சுகாதார நிறுவனத்தால்,உத்திரவாதமளிக்கப்படுகின்றது 
                               புகை பிடிக்கும் சிலர் கொஞ்சம், கொஞ்சமாக அந்த பழக்கத்தை நிறுத்தி வருவதாகச் சொல்வர். இது தவறு. நிறுத்த விழைந்து விட்டால், உடனடியாக நிறுத்திவிட வேண்டும். பக்க விளைவுகள் ஏற்படாது 






நிறுத்துவதால் விளையும் நன்மைகள்

·                     ரத்த அழுத்தம் சீரடையும்.
·                     இருதய துடிப்பு சீரடையும்.
·                     இரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்ஸிஜன் அளவு சீராகும்.
·                     இரத்தத்தில் கலந்திருக்கும் கார்பன் மோனாக்ஸைடு வெளியேறும்.
·                     நுரையீரல் சுத்தமடைகிறது.
·                     உடலிலுள்ள நிக்கோடின் வெளியேறும்.
·                     சுவைக்கும், நுகரும் திறன் கூடும்.
·                     நுரையீரலின் செயல்பாடு அதிகரிக்கும். 
சட்டம் தன் கடமையை செய்யும்:
                       
புகைக்கும் புகையிலை மட்டுமல்ல மெல்லும் புகையிலை பயன்பாட்டைக் குறைத்திடவும், எச்சரிக்கை வாசகங்கள் சிகரெட் பாக்கெட்கள் மீதும், புகையிலை பாக்கெட்கள் மீது தேள் படங்களைப் போடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. பொது இடங்களில் சிகரெட் பிடிப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 31ந்தேதி, உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு, புகையிலையின் பாதிப்புகள் எடுத்துரைக்கப்படுகின்றது. இருந்தும் என்ன, திருந்தும் மனம்தான் வேண்டும்.





No comments:

Post a Comment